பார்வையாளர்களின் பாராட்டுகளை குவித்து வரும் "அயலி" இணைய தொடர் : திரை விமர்சனம் Movie Review (2023)

26-01-2023
Muthukumar
Ayali Movie Review

Ayali Movie Cast & Crew

Production : Estrella Stories
Director : Muthukumar
Music Director : Revaa

தெய்வத்தின் வழியாகவும் வழிபாட்டு கலாச்சார வழியாகவும் மூடநம்பிக்கை ஆட்கொண்டு பெண்களை அடிமையாய் வைத்திருக்கும் புதுகோட்டையின் பின் தங்கிய வீரபண்ணை கிராமத்தை களமாக வைத்து தொடங்குகிறது அயலி தொடரின் கதை. வயதுக்கு வந்தாலே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற மூடநம்பிக்கை கொள்கையை வழிவழியாக பின்பற்று கிராமத்தில் தான் வயதுக்கு வந்ததை மறைத்து தன்னுடைய மருத்துவ கனவிற்காக போராடும் ஒரு பதின் பருவ பெண்ணின் போராட்ட கதையாகவும் அவளை சுற்றி நிகழும் கிராம சம்பவம் குறித்தும் பேசுகிறது அயலி தொடர். மிகச்சிறப்பாக பெண் சுதந்திரம், பெண் கல்வி முக்கியத்துவம், மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி மறுப்பு போன்றவற்றை துல்லியமான உணர்வுகளை கையாண்டுள்ளது அயலி இணைய தொடர்.

இணைய தொடர் என்றாலே திரில்லர் கதையாகவும் ஒரு கொலையை சுற்றி நடக்கும் சம்பவங்களை மட்டுமே பேசும் என்ற வரம்பை உடைத்து இப்படியும் இணைய தொடரை மக்களுக்கு பிடித்தது போல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமார்.  மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கு பொதுஅறிவும் நடைமுறை கல்வி அறிவும் மிக முக்கியம். அத்தகைய கல்வியின் முக்கியத்துவத்தை  ஜனரஞ்சகமான ஊடகத்தில் மக்களுக்கு பிடித்தது போல் எந்தவொரு காட்சியிலும் முகம் சுளிக்காமல் வழங்கியிருப்பது சிறப்பு. தொடரின் முக்கிய கருவாக ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் ஒரு பெண் கல்வி கற்க வேண்டும். என்ற மையக்கருவை எபிசோடுக்கு எபிசோட் தெளிவுபடுத்கின்றனர்.

ஆணாதிக்கம் என்பது ஆண்கள் மட்டும் செய்வதில்லை அந்த சித்தாந்தத்தை பல குடும்பங்களில் பெண்களும் பின் பற்றுகின்றனர் என்ற சில பெண்களின் நிஜ கள பின்புலத்தை  சிறப்பாக சொல்லியிருப்பது பாராட்டுகள் "உங்க குடும்ப கௌரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?" "யார் என்ன சொன்னாலும் உன் அறிவுக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்" "அப்படி குடும்ப மானம் முக்கியம்னா, அதை நீங்களே தூக்கிச் சுமக்கவேண்டியதுதானே? அதை ஏன் பொம்பளைங்கக் கிட்ட தர்றீங்க?" “கோயில இடிச்சிட்டா பொண்ணுங்கள எப்படி கட்டுப்படுத்துவீங்க” “ஆம்பளைங்க சேலையத்தான் கட்டணும்’ என சொல்லும்போது, ‘கட்டிக்க.. பொறக்கும்போதே வேட்டியோடவா பொறந்த..’ போன்ற அட்டகாசமான வசனங்கள் பிற்போக்கு தனத்திற்கு சவுக்கடி கொடுக்கிறது.

வயதுக்கு வந்து தமிழ் செல்வி கெத்தாக ஊரை சுற்றி வரும் காட்சி.. ஊர் தாண்டாத அம்மா பேருந்து ஜன்னல் வழியே வானம் பார்த்து வரும் காட்சி.. ஊர் பெண்கள் பள்ளி வகுப்புகளுக்கு சென்று தங்கள் பெயரை எழுதி புன்னகைக்கும் காட்சி. வலுக்கட்டாயமாக கட்டிய தாலியை அறுத்து வீசி அடக்குமுறைக்கு எதிராக பேசும் காட்சி. சிறுவயதில் இரண்டு பிள்ளைக்கு தாயாக மாறி குடிகார கணவனின் இறப்பு சடங்கில் என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கும் மைதிலியின் காட்சி மனதை வலுவாக உலுக்குகிறது. இதுபோன்று ஒவ்வொரு எபிசொடுகளிலும் அழுத்தமான காட்சியை சொல்லிருப்பது சிறப்பு.

90 காலக்கட்டத்தை நேர்த்தியாக திரையில் காட்டிஇருக்கிறார் கலை இயக்குனர். தொடருக்கு தேவையான இடங்களில் இசையமைப்பாளர் ரேவா வின் கச்சிதாமான பின்னணி இசை மற்றும் பாடல்கள் நன்றாகவே பொருந்தி தொடரை ரசிக்க வைத்திருக்கிறது. தொடரின் தரத்தை எந்தவொரு இடத்திலும் சிதறவிடாமல் பார்வையாளர்களுக்கு பிடிக்கும்படி காட்சியமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. குறிப்பாக வளமான கிராமங்களையும் குல தெய்வ வழிபாடு காட்சிகளையும் வறட்டு குணம் படைத்த கிரமாத்தார்களின் முகங்களையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

தமிழ்செல்வியாக நடித்த அபி நக்ஷத்ரா மொத்த தொடரையும்  தன் நடிப்பினால் தாங்கி கவனம் ஈர்க்கிறார். தமிழ் செல்விக்கு அம்மாவாக நடித்த அனுமோல், அப்பாவாக நடித்த அருவி மதன் ஆகியோர் பல இடங்களில் ஆச்சர்யத்தை அளிக்க கூடிய நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக அனுமோல் அபி நக்ஷத்ராவிற்கு இணையாக நடித்திருப்பார்.  நிச்சயம் தமிழ் சினிமாவில் முக்கிய இடம் வகிப்பார். சிங்கம் புலி, லிங்கா, டி.எஸ்.ஆர் தர்மராஜ். யூடியூப் புகழ் ஜென்சன் நடிப்பு கவனிக்க வைக்கிறது. பெரும்பாலும் தொடரில் புதுமுகங்கள் ஆனால் எந்தவொரு இடத்திலும் அப்படி தெரியாமல் நேர்த்தியான நடிப்பை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

தொடரின் மையக்கருவில் பொருந்தாதகாட்சிகள் தொடரில் இடைச்செருகலாக வைத்திருந்தாலும் தொடரின் சுவாரஸ்யம் குன்றாமல் அவை கடந்து செல்கின்றது. ஆகச்சிறந்த முற்போக்கான தொடரில் ஒருவரின் உருவம் சார்ந்த கேளிகள் நகைச்சுவைக்காக வைத்திருப்பது மட்டும் துருத்தலாக இருந்தது. பலவீனமான வில்லத்தன டிராக் தொடரில் சற்று கோட்டை விடுகிறது. ஆனால் இந்த தொடரில் வில்லன் கிராம மக்கள் பின்பற்றும் கொள்கை என்பதால் அது பெரியளவு உறுத்தவில்லை.

அயலி தொடர் பேசும் கருத்துக்கள் அந்த காலத்தில் நடந்தது என்று கடந்து விட முடியாது. இன்றும் பல இடங்களில் இது போன்ற ஆணாத்திக்க பிரச்சினையும் மூட நம்பிக்கை வழிபாடுகளும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. அத்தகைய செயல்பாடுகளை சரமாரியான கேள்விகளுடன் அடித்து நொறுக்குகிறது அயலி தொடர். ஜீ 5 ல் வெளியாகியுள்ள அயலி தொடர் எந்த இடத்திலும் அயர்ச்சியடையாமல் ஒரே நேரத்தில் 4.30 மணி நேரத்தில் உள்ளடங்கிய எட்டு எபிசோடுகளையும் ஒரேடியாக பார்த்து விட முடிகிறது. மொத்தத்தில் கதைக்கரு , திரைக்கதை, படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள், ஒளிப்பதிவு, வசனம், பின்னணி இசை என ஒரு சிறந்த படைப்பிற்கான கூறுகளோடு எல்லா பிரிவுகளிலும் கணக்கச்சிதமாக வெளியாகியிருக்கிறது அயலி. குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர். இதுபோன்ற முற்போக்கு சிந்தனை பேசும் தொடரை தயாரித்த தயாரிப்பாளர் குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸ், மற்றும் ஜீ 5 ஓடிடி தளத்திற்கு பாராட்டுகள்.

Verdict: முற்போக்கு சிந்தனைகளை இளைய தலைமுறையினர் வழியாக சொல்லும் அயலி தமிழ் திரையுலகிற்கு பெருமை

Galatta Rating: ( 3.0 /5.0 )Rate Ayali Movie - ( 0 )
Public/Audience Rating