பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.பல வருடங்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று ரசிகர்கள் ஆரவாரத்தோடு காத்திருந்தனர்.அதோடு நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,மீனா,குஷ்பூ,ஜெகபதி பாபு,பிரகாஷ் ராஜ் என பெரிய ரசிகர் பட்டாளமே இந்த படத்தில் சேர்ந்துவிட படத்தின் எதிர்பார்ப்பு கூடியது.இந்த படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பற்றி பார்க்கலாம்

ஊர் ப்ரெசிடெண்ட் காளையனாக வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது தங்கை தங்கமீனாட்சி மீது அதீத பாசம் வைத்துள்ளார்.தங்கமீனாட்சிக்கு திருமணம் முடிகிறது ஆனால் அதற்கு பிறகு நடக்கும் சில எதிர்பாராத திருப்பங்களால் அவர் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போகிறது.தங்கமீனாட்சியின் வாழ்க்கையை காளையன் சரி செய்தாரா , அவரை வில்லன்களிடமிருந்து காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

எவ்வளவு வயதானாலும் அதே எனர்ஜி,அதே ஸ்டைல் என காளையனாக கலக்கி இருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,ஆக்ஷன்,ரொமான்ஸ்,செண்டிமெண்ட் என அனைத்திலும் தனது எதார்த்த நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார் ரஜினிகாந்த்.ரஜினிக்கு அடுத்தபடியாக தங்க மீனாட்சியாக அசத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.பாசமிகு தங்கையாகவும்,உரிமைக்காக போராடும் மனைவியாகவும் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்துகிறார் கீர்த்தி சுரேஷ்.படம் நெடுக எமோஷனல் காட்சிகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் எமோஷனல் காட்சிகள் மட்டுமே இருக்க படத்தின் ஓட்டத்தை பெரிதும் பாதிக்கிறது.

நயன்தாரா கமர்ஷியல் பட நாயகியாக தனக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளார்.குஷ்பூ,மீனா,பிரகாஷ்ராஜ் என பெரிய நடிகர்கள் இருந்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்தாதது படத்திற்கு பின்னடைவாக அமைகிறது.சூரி,சதிஷ்,சத்யன்,ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கின்றனர் ஆனால் அதுவும் படத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.ஜெகபதி பாபு,அபிமன்யு சிங் என இரண்டு வில்லன்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு வெயிட்டான கதாபாத்திரம் அமையாதது மேலும் ஒரு மைனஸாக அமைகிறது.

நல்ல கிராமத்து கதைக்களம் அதில் எமோஷன்ஸ் என சிவா தனது வழக்கமான ஹிட் பார்முலாவை இந்த படத்திலும் எடுத்திருக்கிறார்,ஆனால் ஓவர் எமோஷனலாக படம் செல்ல சில இடங்களில் சலிப்பு தட்டுகிறது.திரைக்கதையில் கவனம் செலுத்தி ஸ்டராங்கான கதாபாத்திரங்கள் அமைத்திருந்தால் படம் இன்னும் நல்ல படமாக வந்திருக்கும்.பாடல்கள் சுமார் ரகம் தான் என்றாலும் படத்திற்கு பக்கபலமாக இருப்பது இமானின் பின்னணி இசை, பல மாஸ் காட்சிகளை தனது பின்னணி இசை மூலம் மெருகேற்றியுள்ளார் இமான்.ஒளிப்பதிவாளர் வெற்றி தனக்கான பணியை சிறப்பாக செய்துள்ளார்.ரூபன் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார் இருந்தாலும் சில காட்சிகளை குறைத்திருந்தால் படத்தின் விறுவிறுப்பை இன்னும் கூட்டியிருக்கும்.

சூப்பர்ஸ்டார் பல வருடங்கள் கழித்து வில்லேஜ் ஸ்டோரியில் பட்டையை கிளப்பி இருந்தாலும் இந்த அண்ணாத்த சுமார் ரகம் தான்