அகமதாபாத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்து, இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. இந்நிலையில் அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து வீரர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 


இதுபற்றி ஃபேஸ்புக் வீடியோ ஒன்றில் பேசிய விவியன் ரிச்சர்ட்ஸ், ‘’நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பிட்ச் குறித்து என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏன் இந்த கேள்விகள் எல்லாம் என்னிடம் வருகிறது என்பதே எனக்கு புரியவில்லை. இந்த டெஸ்ட் குறித்து யாரெல்லாம் அழுகிறார்களோ, இப்போது ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பல மைதானங்களில் பவுன்சர்களிலும் ஸ்விங் பந்துகளிலும் பேட்ஸ்மேன்கள் கஷ்டப்பட்டார்கள். பின்பு அதற்கு பழகி, தைரியமாக வேகப்பந்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இப்போது நடப்பது எல்லாம் அதற்கு மாறாகவே இருப்பதாக தோன்றுகிறது.


பலரும் ஒரு விசயத்தை மறந்துவிட்டார்கள், பேட்ஸ்மேன்களின் திறனை சோதிப்பதிலே தான் இதற்கு டெஸ்ட் மேட்ச் என பெயர் வைக்கப்பட்டது. வேறு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்கிறீர்கள் என்றால் அதற்கு ஏற்ப தயாராகவே இருக்க வேண்டும். இப்போது உட்கார்ந்து அழுவது, புகார் கூறுவதெல்லாம் சரியாக இல்லை.  சுழற்பந்துவீச்சிவில் இந்தியா தாயகம். களத்தை  மிகச்சிறப்பாக பயன்படுத்தி இந்தியா விளையாடுகிறது. என்னை கேட்டால், இந்த பிட்ச்சை சவாலாக நினைத்து இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ” என்றார்.