"Not Just Cricket" என்ற நிகழ்ச்சியில்  இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸ் உடன் விராட் கோலி தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது 2014ம் ஆண்டு இங்கிலாந்து தொடரின்போது, விராட் கோலி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அந்நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 


அந்நிகழ்ச்சியில் விராட் கோலியிடம் ’2014 இங்கிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை அதனால் மன அழுத்தம் உண்டானதா?" என  மார்க் நிக்கோலஸ் கேள்வி எழுப்பினார்.


இந்த கேள்விக்கு பதிலளித்த விராட் , "ஆமா. அந்த சமயம் எனக்கு மிகுந்த மன அழுத்தம் இருந்தது. அந்த மன அழுத்ததிலிருந்து எப்படி மீள்வது என புரியாமல் இருந்தேன். ஒரு தொடரில் நீங்கள் சரியாக ரன் சேர்க்கவில்லை என்றால், மறுநாள் காலையில் கண் விழிக்கும் போது ஒரு குற்ற உணர்வு ஏற்படும். இந்த மொத்த உலகத்திலேயே நான் மட்டும் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன். சில நேரங்களில் நீங்கள் எதையும் கட்டுப்படுத்த முடியாது என எல்லா பேட்ஸ்மேன்களும் உணர்ந்து இருப்பார்கள். 


பல கிரிக்கெட் வீரர்களுக்கு மன அழுத்தம் உள்ளன. அத்துடன் தான் நீண்ட காலமாக போராடுகிறார்கள். அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். மன அழுத்தத்திலிருந்து மீள தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அது இருந்தால் நிச்சயம் மன அழுத்தத்திலிருந்து மீண்டு வந்துவிடலாம்” என்று பதிலளித்தார்.


விராட் கோலியின் இந்த பதில் கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு, லைக்ஸ்களை குவித்து வருகிறது.