டோக்கியோ பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில், இந்திய வீராங்கனை தங்க பதக்கம் வென்று வரலாறு சாதனை படைத்து உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த போட்டியில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா மிகவும் அசத்தலாக விளையாடி, இறுதி போட்டிக்கு முன்னேறிச் சென்றார். 

அதன் படி, நடைபெற்ற தகுதிச் சுற்றில் 621.7 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதனால், அவர் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் பெற்று தருவார் என்பது உறுதியானது.

அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அவர், 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையைச் சமன் செய்தார். 

இதன் மூலமாக, இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்திருக்கிறார் அவனி லெகாரா. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் அவனி லெகாரா, இந்தியாவுக்கு தங்கத்தை தேடி தந்து புதிய சரித்திர சாதனையைப் படைத்திருக்கிறார்.

அதே போல், டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா, ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு கிட்டதட்ட  44.38 மீட்டர் தூரம் வீசி அசத்தினார். இதன் மூலமாக, இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்து உள்ளது. 

டெல்லியை சேர்ந்த 24 வயதுடைய யோகேஷ் பெற்றுள்ள வெள்ளிப் பதக்கத்தால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது சற்று உயர்ந்து உள்ளது. 

அதே போல், பாராலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில், இந்தியாவுக்கு இரட்டை பதக்கம் கிடைத்து உள்ளது.

அதன் படி, இந்திய வீரர்கள் தேவேந்திரா 64.35 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்று உள்ளனர்.

இதன் மூலமாக, இந்தியாவுக்கு 7 பதங்கங்கள் கிடைத்திருக்கிறது. இது வரை, இந்தியா பாராலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.