டிஎன்பிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி 3 வது முறையாக கோப்பையை வென்று அசத்தி உள்ளது. 

தமிழ்நாடு பிரிமீயர் லீக்கான டி.என்.பி.எல் 5 வது 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டியானது, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்றிரவில் நடைபெற்றது. 

இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்சை எதிர்கொண்டது. அதன் படி, டாஸ் ஜெயித்த திருச்சி கேப்டன் ரஹில் ஷா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன் படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தியும், விக்கெட் கீப்பர் ஜெகதீசனும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கி அதிரடியாக விளையாடி அசத்தினர். இதில், முதல் 5 ஓவர்களில் 52 ரன்களை எடுத்திருந்த போது, இந்த ஜோடி பிரிந்தது. 

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஜெகதீசன் மட்டும் வெளுத்து வாங்கினார். அதன் படி, 58 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி, 2 சிக்சர் என அடுத்து நொறுக்கி அதிக பட்சமாக 90 ரன்களை சேர்த்தார்.

அத்துடன், டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இது வாகும்.

இதனால், 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து, 183 ரன்கள் குவித்தது.

இதனால், 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கி திருச்சி அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. சிக்சர் மழையாக வான வேடிக்கை காட்டியது. 

குறிப்பாக, தொடக்க வீரர் அமித் சாத்விக், 16 பந்துகளி்ல், ஒரு பவுண்டரி, 5 சிக்சர் என மொத்தம் 36 ரன்களில் எடுத்திருந்த போது கேட்ச் ஆகி அவுட்டானார். 

பின்னர் வந்த திருச்சி அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட் பறிகொடுத்து தினறியது. ஒரு கட்டத்தில் 108 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திருச்சி அணி, தவித்துப்போனது. ஆனால் அடுத்த 2 ஓவர்களில் மீண்டும் அந்த அணி சரவெடிய காட்டத் தொடங்கியதால், போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அதன் படி, 19 வது ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மிகவும் த்ரிலிங்கான அந்த கடைசி ஓவரில் அந்த அணியால் வெறும் 4 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால், திருச்சி அணியால் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 175 ரன்களே மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன் காரணமக, சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. 

மேலும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது இந்த வெற்றி கோப்பையுடன் சேர்த்து, மொத்தம் இது வரை 3 வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி உள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

தற்போது வெற்றி கோப்பையைக் கைப்பற்றி உள்ள சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அதே போல், 2 வது இடம் பிடித்த திருச்சி அணிக்கு 30 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெற்றி பெற்ற அணிகளுக்கு நடிகரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், வெற்றிபெற்றதற்கான காசோலைகளை வழங்கினார்.