“இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தோனி மீது கோப்பட்டு கடுமையாக ஆங்கிலத்தில் திட்டி தீர்த்தார்” என்று, முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் மனம் திறந்து பேசி உள்ளார். 

சமகால கிரிக்கெட் உலகில் மகேந்திர சிங் தோனி, என்ற பெயரை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது. அதற்கு காரணம், அவர் படைத்து வைத்த சாதனைகள் வரலாறாக பேசப்பட்டு வருகின்றன.

இப்படி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் தொடர் என்று, உலக கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற சென்னையின் தல என்று அழைக்கப்படும் தோனி, தற்போது ஐபில் தொடர்களில் மட்டும் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அதே போல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட், மிகவும் பொறுமைசாலி என்றும், களத்தில் அவ்வளவு எளிதாக யார் மீதும் கோபப்படாத சிறந்த கேப்டன் மற்றும் வீரர் என்ற புகழ் பெற்று திகழ்ந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள விளம்பர படம் ஒன்றில், “காரில் இருந்தபடி ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக சத்தம் போட்டு கத்துவது, கிரிக்கெட் பேட்டால் கார் கண்ணாடிகளை உடைப்பது போன்ற காட்சிகளில்” ராகுல் டிராவிட் நடித்துள்ளது, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து உள்ளது.

இது வரை யாரும் பார்த்திடாத வகையில், ராகுல் டிராவிட் ஆத்திரத்துடன் நடித்திருந்த இந்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் “இந்திராநகர் ரெளடி” என்ற, ஹேஷ்டேக் உருவாக்கி, டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பலரும் அந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். இதனால், அந்த வீடியோ, கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த காட்சியை பார்த்த இந்திய முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், “ராகுல் டிராவிட் ஒரு முறை தொனியிடம் இது போன்று கோபப்பட்டார்” என்ற புதிய தகவலை மனம் திறந்து பகிர்ந்து உள்ளார். 

இது குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சேவாக், “கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் நிதானத்தை இழந்து கோபப்பட்டதை நான் ஒரு முறை பார்த்து இருக்கிறேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“அதாவது, கடந்த 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாங்கள் விளையாடிய போது, தோனி இந்திய அணியின் புதிய வரவாக இருந்தார். 

அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தோனி, ஒரு ஷாட் அடித்து ‘பாயிண்ட்’ திசையில் கேட்ச் ஆகி அவுட் ஆனார் என்றும், ஆட்டமிழந்து வெளியேறிய தோனியிடம், டிராவிட் மிகவும் கோபப்பட்டுக் கத்தினார்” என்றும், கூறி உள்ளார். 

குறிப்பாக, “ 'இந்த மாதிரி தான் நீ விளையாடுவாயா?, நீ ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்' என்று, சத்தம் போட்டு கத்தினார்” என்றும், சேவாக் தெரிவித்து உள்ளார். 

“அப்போது, டிராவிட் ஆங்கிலத்தில் திட்டிய வார்த்தைகளில் பாதி எனக்குப் புரியவில்லை என்றும், இதனால் அந்த சூழலில் நான் இருக்க விரும்பாமல் நான் அங்கிருந்து அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்து சென்று விட்டேன்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

“அதன் பிறகு, அடுத்த போட்டியில் தோனி பெரிய அளவில் ஷாட்டுகள் அடிக்கவில்லை என்றும், இதனால் தோனியிடம் நான் சென்று, 'உனக்கு என்ன பிரச்சினை? என்று நான் விசாரித்தேன்” என்றும் கூறினார். 

“ஆனால், அதற்கு அவர் 'நான் மீண்டும் டிராவிட்டிடம் திட்டு வாங்க விரும்பவில்லை. ஆட்டத்தை நிதானமாக ஆடி முடித்து விட்டு திரும்பலாம் என்று கூறினார்’ ” என்றும், சேவாக் தெரிவித்து உள்ளார். 

“அப்படி, விளம்பரத்தில் வரும் இந்த கோபம் மாதிரியே ராகுல் டிராவிட் ஒரு முறை மகேந்திர சிங் தோனி மீது கோபப்பட்டு” நான் பார்த்திருப்பதாக, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவிடம் சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, இது இணையத்தில் வைரலாகி வருகிறது.