20 ஓவர் உலக கோப்பையில் 24 ம் தேதி நடக்கும் முதல் பிரதான சுற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ள நிலையில், ஆலோசகராக தனது பணியை தோனி தொடங்கி உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி உள்ளது. 

வரும் நவம்பர் 14 ஆம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெற உள்ள நிலையில், 20 ஓவர் உலக கோப்பையில் 24 ஆம் தேதி நடக்கும் முதல் பிரதான சுற்றில் இந்திய அணியை, அதன் பரம்பரை எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணி எதிர்த்து மோதுகிறது. 

இதனால், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, 20 உலகக் கோப்பைப் போட்டிக்காக மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். 

மிக முக்கியமாக, தோனியன் 'கேப்டன்சி' கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய அளவில் தற்போது வரை பேசப்பட்டுக்கொண்டு வருகிறது. 

குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த T20 IPL ல் போட்டியிலும், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே, 4 வது முறையாக வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அளவுக்கு தனது அணி மற்றும் எதிர் அணியின் பலம் பலவீனங்களை மற்ற கேப்டன்களை விடவும் மிகவும் நன்றாக அறிந்தவராக தோனி அறியப்பட்டு வருகிறார். இதன் காரணமாக, தோனி மீதான எதிர்பார்ப்பும் தற்போது இன்னும் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக, தோனியின் மிக பெரிய அனுபவம், தலைமை பண்பு, முடிவெடுக்கும் திறமை போன்றவை வீரர்களுக்கு சரியான விதத்தில் துணை புரியும் என்பதால், ஆலோசகர் பணியை தோனிக்கு வழங்கும் முடிவை பிசிசிஐ எடுத்திருந்தது. 

அதே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு தலைமை தாங்கிய தோனி, முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார். இதனால், அவரது அனுபவம் இந்திய அணிக்கு பெரிய அளவில் உவியாக இருக்கும் என்பதால் பிசிசிஐ இத்தகைய முடிவை எடுத்து இருக்கிறது.

இதனால், “இந்திய அணிக்கு ஆலோசகராக பணிபுரிய ஊதியம் எதுவும் தேவையில்லை” என்று, தோனியும் கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தான், இந்திய கிரிக்கெட் அணியில் ஆலோசகராக தோனி தனது பணியை தற்போது துவங்கி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நேற்று பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.

அதாவது, டி20 உலகக் கோப்பையின் முதல் பயிற்சி ஆட்டம் இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில் தான், இந்திய அணியினருடன் நேற்று இணைந்த தோனி வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசனைகளை வழங்கினார். 

இது தொடர்பாக, பிசிசிஐ தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கிங் தோனிக்கு அன்பான வரவேற்பு அளிக்கிறோம். புதிய பணியுடன் இந்திய அணியில் தோனி மீண்டும் இணைந்து விட்டார்” என்று, பதிவிடப்பட்டு உள்ளது. 

பிசிசிஐயின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.