ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டர் எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.

இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர்களில் மிக முக்கியமானவராக, இந்தியாவின் நம்பர் 1 வீரராக கருதப்படும் 24 வயதான நீரஜ் சோப்ரா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் ஆப்ஸர் ரேங்கில் அவர் தற்போது பணியாற்றி வருகிறார்.

அத்துடன், இந்த ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் பெரும்பாலானவர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீர் நீரஜ் சோப்ரா, எப்படியும் பதக்கம் வெல்வார் என்று, எதிர்பார்க்கப்பட்டது. 

அதன் படி, டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் மிக எளிதாக நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றார். இதனால், அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, தகுதி சுற்றின் முதல் வாய்ப்பிலேயே நீரஜ் சோப்ரா, 86.65 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து அசத்தினார். இதன் மூலமாக, 2 வது சுற்று, காலிறுதி, அரையிறுதி செல்லாமல், நேரடியாக அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார். 

அத்துடன், தனது முதல் ஒலிம்பிக் தொடரிலேயே அசத்தி, நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. 

அதன் படி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டி, சற்று முன்பாக நடைபெற்ற நிலையில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா சற்று முன்பாக அபாரமாக விளையாடினார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்று தங்களது திறமையைக் காட்டினார்கள். 

இதனால், இறுதிச்சுற்று, 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதன் படி, மொத்தம் 6 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 

இதில், முதல் 3 சுற்றுகளின் முடிவில் டாப் 8 வீரர்கள் மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். அதன் பிறகு, மேலும் 3 சுற்றுகள் நடத்தப்பட்டன. இறுதியில், 6 சுற்றுகளின் முடிவிலும் வீரர்கள் வீசும் அதிகபட்ச தூரத்தைக் கணக்கீட்டு, டாப் 3 வீரிகளுக்குப் பதக்கம் அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் தனது முதல் சுற்றில் தனது அசாத்தியமான திறமையால், 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, டாப் 8 வீரர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கும், அவர் முன்னேறி இந்திய ரசிகர்களை குதுகளப்படுத்தினார். 

2 வது சுற்றிலும் அதே வேகத்தை காட்டிய அவர், இதில் 87.58 மீட்டர் தூரம் வீசி, ஒட்டுமொத்த தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனால், இந்த தூரம், அவருடைய மற்றும் போட்டியின் அதிகபட்ச தூரமாக பார்க்கப்பட்டது. 

முதல் 2 சுற்றுகளில் அதிவேகமாக நீரஜ் சோப்ரா வீசி வந்த நிலையில் 3 வது சுற்றில் அவரின் வேகம் சற்று குறைந்தது. அவரால் 76.79 மீ தூரம் மட்டுமே வீச முடிந்தது. 

எனினும், அவரின் 87.58 மீட்டர் என்ற அதிகபட்ச இலக்கை அதன் பிறகு, யாராலும் வீச முடியாமல் போனது. இதன் காரணமாக, நீரஜ் தொடர்ந்து தனது முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டு, டாப் 8 இடங்களுக்குள் வந்தார். 

அதே போல், 4 வது சுற்றின் போது, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, போட்டி கோட்டை தாண்டி காலினை வைத்ததால் இதில் அவர் ஃபௌல் ஆகிப்போனார். ஆனால், அவரின் தூரமே தொடர்ந்து முதலிடம் வகித்தது.

பின்னர், வீசிய 5 வது சுற்றின் போது, அவர் மிகவும் உயரமாக வீசி விட்டதால் அவரின் ஈட்டி குறைந்த பட்ச தூரத்தை அடையவில்லை. அதன் தொடர்ச்சியாக, 6 வது மற்றும் கடைசி சுற்றிலாவது நீரஜின் தூரத்தை விட அதிக தூரம் வீசி விடலாம் என பல வீரர்களும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அது கடைசி வரை நிறைவேறாமல் போகவே, இறுதியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்று இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்த்துத் தந்தார். 

இதன் மூலமாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். அத்துடன், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் வீரர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

இதனால், நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் தற்போது குவிந்து வருகின்றன.

இதனிடையே, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக், ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.