கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் நிலையில், சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. 

அதாவது, இந்தியாவில் கொரோனா பெருந் தொற்று 2 வது அலையாகப் பரவிக்கொண்டு இருப்பதற்கு மத்தியில் தான், 14 ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி இந்தியாவில் நடத்தப்பட்டது. மொத்தம் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டு, இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியிருந்த நிலையில் தான், முதலில் 2 கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், திடீரென்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து 4 வீரர்கள் மற்றும் வீரர்கள் அல்லாத அணி நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்றிக்கொண்டதால், வேறு வழியில்லாமல் போட்டிகள் அப்போது உடனடியாக நிறுத்தப்பட்டன.

இதனையடுத்து, “எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ கூட்டத்தில் முடிவு” செய்யப்பட்டது.

 அதன் படி, “31 போட்டிகளை மொத்தம் 25 நாள்களுக்குள் நடத்துவது” என்று, தீர்மானிக்கப்பட்டன. 

ஐபிஎல் டி20 போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் நிலையில், முதல் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்த்து விளையாடுகிறது.

தற்போது, இது தொடர்பான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் படி, “ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 10, 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி” நடக்கிறது. 

அத்துடன், “துபாயில் 13 போட்டிகள், ஷார்ஜாவில் 10 போட்டிகள், அபுதாபியில் 8 போட்டிகளும் நடைபெறுகின்றன. இதில், 2 போட்டிகள் உள்ள நாட்களில் ஒரு போட்டி இந்திய நேரம் மதியம் 3.30 மணிக்கும், மற்றொரு போட்டி இரவு 7.30 மணிக்கும் நடைபெறுகிறத. மற்ற நாட்களில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் இரவுப் போட்டிகளாக இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

பின்னர், அபுதாபியில் 20 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணியும் - கொல்கத்தா அணியும் மோதுகின்றன. 24 ஆம் தேதி ஷார்ஜாவில் தொடங்கும் போட்டியில் சிஎஸ்கே அணியை - ஆர்சிபி அணி எதிர்த்து மோதுகிறது.

குறிப்பாக, “டெல்லி கேப்பிடல்ஸ் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 2 வது மற்றும் 3 வது இடத்தில் இருக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி  8 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளன. இந்த 4 அணிகள் மட்டுமே, டாப் 4 இடங்களில்” உள்ளது.

அதே போல், 5 வது இடத்தில் 6 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 6 வது இடத்தில் 6 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 7 வது இடத்தில் 4 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 8 வது இடத்தில் 2 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் அணி இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.