ஐபிஎல் திருவிழா மீண்டும் தொடங்கும் நிலையில், “செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்” என்று, பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பெருந் தொற்று 2 வது அலையாகப் பரவிக்கொண்டு இருப்பதற்கு மத்தியில்தான், 14 ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி இந்தியாவில் நடத்தப்பட்டது. 

இது வரை, 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன. கடைசியாக கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் போது, 2 கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, திடீரென்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 4 வீரர்கள் மற்றும் வீரர்கள் அல்லாத அணி நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்றிக்கொண்டதால், வேறு வழியில்லாமல் போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் காணொலி மூலமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றபோது, அந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இதில், இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. 

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, “14 வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்று, தெரிவித்தார்.

அத்துடன், “எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ கூட்டத்தில் முடிவு” செய்யப்பட்டன.

அதன் படி, “31 போட்டிகளை மொத்தம் 25 நாள்களுக்குள் நடத்துவது” என்று, தீர்மானிக்கப்பட்டதாகவும்” செய்திகள் வெளியானது.

இதில், “ஓரே நாளில் 2 போட்டிகள் என்ற வீதத்தில், 4 நாள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக” தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 ஆம் தொடங்குகிறது என்றும், இந்த போட்டிகள் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெறும்” என்றும், தெரிவித்தார். 

மேலும், “ஐபிஎல் போட்டியின் தேதிகளால் டி20 உலகக் கோப்பை பாதிக்கப்படாது என்றும், வீரர்களுக்கு போதுமான நேரமும் இதன் மூலம் கிடைக்கும் என்றும், இதையெல்லாம் யோசித்தே அட்டவணையைத் தயார் செய்து இருப்பதாகவும்” பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.