இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், “அவர் ஏன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார்?” என்பதற்கான காரணங்களும் வெளியாகி உள்ளன.

“இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக” விராட் கோலி நேற்றைய தினம் அதிரடியாக அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் 32 வயதான கோலி விராட் கோலி, கேப்டனாக இருந்து வருகிறார். இப்படியாக, 3 வடிவிலான போட்டிகளுக்கும் கோலி கேப்டனாக இருப்பதால், இதனால் ஏற்பட்டு இருக்கும் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில் விராட் கோலியின் நிலைப்பாடு இருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.

இதனால், “20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக” கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியான நிலையில், விராட் கோலி நேற்றைய தினம் தனது விலகல் முடிவை அறிவித்தார்.

இது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்த டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும்” கோலி அறிவித்து உள்ளார். 

ஆனால், தற்போது இது குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

அதாவது, “இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவானை அணியில் சேர்த்தே ஆக வேண்டும்” என்று, விராட் கோலி பிடிவாதம் பிடித்தார் என்றும், விஜய் ஹசாரே டிராபியில் நன்றாக ஆடிய இன்னொரு வீரரை தொடக்கத்தில் களமிறக்க அணித் தேர்வுக்குழு விரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தேர்வுக் குழுவுடன் அதிருப்தி ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று, ஷிகர் தவானுக்காக கோலி நின்று உள்ளார் என்றும், அவருக்கு பதிலாக அவர் புதிய வீரர் வருகையை விரும்பவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளன. 

இதனால், ஷிகர் தவானுக்காக தான் கோலி தனது கேப்டன் பொறுப்பை இழந்திருக்கிறார் என்கிற தகவலும் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றுடன்,புதிய அணித் தேர்வுக் குழுவில் ரவி சாஸ்திரி போன பிறகு புதிய பயிற்சியாளர் வருகை ஆகிய காரணங்களால் விராட் கோலிக்கு மேலும் பல சவால்கள் அதிகமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, தோனியின் மெண்ட்டார் ரோல் டி20 உலகக் கோப்பையையும் தாண்டி நீடித்தால், அணித் தேர்வு விவகாரம் உள்ளிட்டவற்றில் தோனி தலையிடுவார் போன்ற பல காரணங்களும், விராட் கோலியின் விலகலுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. 

இது போன்ற காரணங்களினால் தான், விராட் கோலி டி20 கேப்டன்சியை உதறியதாகவும் கிரிக்கெட் உலகில் செய்திகள் உலா வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.