கொரோனாவால் தடைபட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

14 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்த நிலையில், 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், மே 3 ஆம் தேதியுடன் ஐபிஎல் போட்டிகள் அப்படியே காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது.

அதே நேரத்தில், 14 வது ஐபிஎல் தொடரில் அது வரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், எஞ்சி உள்ள 31 போட்டிகள் கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் மீண்டும் நடைபெறுகிறது.

குறிப்பாக, இன்று நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

அதாவது, 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.

அத்துடன், புள்ளி பட்டியலில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் மிகவும் வலுவான நிலையில் 2 வது இடத்தில் உள்ள சென்னை அணியானது, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறும் சூழல் இருக்கிறது. 

அதே நேரத்தில், இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லியில் மோதிக்கொண்ட லீக்கில் சென்னை அணி 218 ரன்கள் சேர்த்திருந்த போதிலும், மும்பை அணியின் அதிரடி வீரர் பொல்லார்ட்டின் அதிரடியாக விளையாடி வெறும் 34 பந்தில் 8 சிக்சருடன் 87 ரன்கள் குவித்து, மும்பை அணியை கடைசி பந்தில் வெற்றிப் பெற செய்தார். 

இதனால், அந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொள்ள சென்னை அணி இன்றைய போட்டில் மிக கடுமையாக போராடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஓபனிங் பேட்ஸ்மேன் பேட்ஸ்மேன் பாப் டு பிளிஸ்சிஸ் காயம் காரணமாகவும் மற்றும் சென்னை அணியின் ஆல் ரவுண்டராக வலம் வரும் சாம் கர்ரனுக்கு 6 நாள் தனிமைப்படுத்துதல் நிறைவடையாததால், அவர்கள் இருவரம் இன்றைய போட்டியில் விளையாவடு சந்தேகமாகி உள்ளது.

ஆனாலும், சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு என்று திறமையான வீரர்கள் பட்டாளத்துடன் சென்னை அணி இன்று சரவெடி காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதே நேரத்தில் மும்பை அணி 4 வெற்றி, 3 தோல்வி என்று பட்டியலில் 8 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.