ராஜஸ்தான் அணியை துவம்சம் செய்த கொல்கத்தா அணி மெகா வெற்றியை பதிவு செய்திருப்பதின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை 99.99 சதவிகிதம் உறுதி செய்திருக்கிறது.

2021 ஐபிஎல் கிரிக்கெட்டின் 54 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதி விளையாடியது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

அதன்படி கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நல்ல தொடக்கத்தை தந்த நிலையில், பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்தது. 

அதாவது, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், இந்த போட்டியில் கொல்கத்தா கண்டிப்பாக வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்ற அவசயம் கருதி, கவனமாகவும் நிதானமாகவும் விளையாடினார்கள். 

அதன் பிறகு, கொல்கத்தா பேட்டிங்கில் படிப்படியாக அதிரடி காட்டியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா வந்த வேகத்தில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து நொறுக்க 5 பந்துகளில் 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 

இதையடுத்து, சுப்மன் கில்லும், ராகுல் திரிபாதியும் ரன் ரேட்டை அதிரடியாக உயர்த்தினார்கள். சுப்மன் கில் 40 வது பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆனாலும், அவர் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் திரிபாதியும் 21 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இந்த போட்டியில், ராஜஸ்தான் 17 ரன்களை எக்ஸ்டராக்களை வாரி வழங்கியது. இதனால், 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது கொல்கத்தா அணி. 

பின்னர், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான், தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஷகிப் ஓவரில் போல்டாக, லிவிங்ஸ்டன் 6 ரன்களில் ஃபெர்கியூசன் பந்தில் கேட்ச்சானார்.

பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 1 ரன்னில், ஷிவம் மாவி ஓவரில் கேட்ச்சாக, இளம் வீரர் அனுஜ் ராவத் முதல் பந்திலேயே எல்பி ஆகி வெளியேறினார். 

இதனையடுத்து, க்ளென் ஃபிலிப்ஸ் 8 ரன்களில் மாவி ஓவரில் அவுட்டாக, 33 ரன்களுக்கெல்லாம் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது தட்டு தடுமாறிப்போனது ராஜஸ்தான். 

பின்னர், ரன்கள் அடிக்க அந்த அணியில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி, வெறும் 85 ரன்கள் மட்டும் எடுத்தது. 

அந்த அணியில் தெவாட்டியா மட்டும் அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார். இதனால், 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றியை பதிவு செய்தது. 

கொல்கத்தா அணியானது, இந்த வெற்றியின் மூலமாக, 14 வது புள்ளியைப் பெற்று உள்ளது. இவற்றுடன், தனது ரன் ரேட்டை ஒரே அடியாக உயர்த்தி உள்ளது. 

இதனால், நாளை நடைபெறும் இந்த போட்டியில், ஹைதராபாத் அணியை மும்பையை வீழ்த்தினாலும், 14 புள்ளிகள் பெறலாமே தவிர, கொல்கத்தாவின் ரன் ரேட்டை மும்பையால் இனி முந்திச் செல்வது ரொம்பவே கடினமான காரியமாக இருக்கிறது. இதன் மூலமாக, பிளே ஆஃப் சுற்றில் 4 வது அணியாக கொல்கத்தா அணி நுழைவது கிட்டதட்ட 99.99 சதவீதம் உறுதியாகி உள்ளது.

குறிப்பாக, இன்று நடைபெறும் மும்பை - சன் ரைசர்சை அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 200 ரன்கள் எடுக்க வேண்டும். இவற்றுடன், எதிர் அணியை வெறும் 29 ரன்களுக்கு சுருட்ட வேண்டும் என்பதால், இதற்கான சாத்தியகூறுகள் இல்லையே என்றே கூறப்படுகிறது. 

இதனால், பிளே ஆஃப் சுற்றில் 4 வது அணியாக கொல்கத்தா அணி நுழைவது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL POINTS TABLE 2021