கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் 2 நாட்களுக்கு பெங்களூருவில் இன்று முதல், இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.

15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசியில் தொடங்க இருக்கிறது.

இதற்கான பணிகள் யாரும் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், எப்போதும் போல் இந்த முறை வழக்கமான 8 அணிகள் இல்லாமல்,  கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இந்த ஆண்டு முதல் புதிதாக இணைந்து உள்ளன. 

இதனால், ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு முதல் 10 அணிகள் இடம் பெறுகின்றன. அதன் படி, மொத்தம்  33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். 

அத்துடன், ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் அதிக பட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 25 வீரர்களை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இதன் படி பார்க்கும் போது, இன்னும் ஒட்டுமொத்தமாக அனைத்து அணிகளுக்கும் சேர்த்து 217 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். 

அந்த வகையில், இந்த வீரர்களை தேர்வு செய்வது தொடர்பான ஐபிஎல் மெகா ஏலமானது, பெங்களூருவில் உள்ள பிரபலன நட்சத்திர ஓட்டலில் இன்று முதல் தொடங்கி, நாளை வரை நடைபெறுகிறது. 

அதன் படி, இன்னும் சற்று நேரத்தில் சரியாக 11 மணிக்கு தொடங்கும் இந்த ஐபிஎல் மெகா ஏலமானது, நாளை ஞாயிற்றுக் கிழமையும் அரங்கேறும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், இந்த ஐபிஎல் மெகா ஏலப்பட்டியலில் இந்திய வீரர்கள் 370 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 220 பேர் என்று ஒட்டு மொத்தமாக 590 வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர். 

இதில், வெளிநாட்டை வீரர்களை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 47 பேரும், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 34 பேரும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 33 பேரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 24 பேரும், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த 24 பேரும், இலங்கையைச் சேர்ந்த 23 வீரர்களும் இந்த மெகா ஏலத்தில் உள்ளனர்.

குறிப்பாக, இந்த வீரர்களுக்கு தொடங்க விலையாக 20 லட்சம் ரூபாயும், அதிக பட்ச தொகையாக 2 கோடி ரூபாயும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில், இந்தியா வீரர்களான ஷிகர் தவான், அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர், சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், அம்பத்தி ராயுடு, தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு தொடக்க விலையாக 2 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

அதே போல், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ், வெஸ்ட் இண்டீசின் வெய்ன் பிராவோ, இவின் லீவிஸ், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட், தென் ஆப்பிரிக்காவின் ரபடா, குயின்டான் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், இங்கிலாந்தின் ஜாசன் ராய் உள்பட 48 வீரர்களின் தொடக்க விலை 2 கோடி ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொண்டு உள்ளதால், அதிகப்படியான வீரர்களை ஏலம் எடுக்க ஒவ்வொரு அணிகளும் போட்டிப்போட்டு வருகின்றன. என்றாலும், இந்த ஆண்டு 2 புதிய அணிகள் சேர்ந்து உள்ளதால், அவர்கள் அதிகபட்சமான வீரர்களை தேர்வு செய்யவும் போட்டாப்போட்டுக்கொண்டு தங்களது அணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் முதல் மெகா ஏலம் இது என்பதால், இதன் பிறகு இப்படியான ஒரு மெகா ஏலம் ஒன்று நடைபெற வாய்ப்புகள் மிக குறைவு என்றே பிசிசிஐ வட்டாரங்கள் கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், இதுவே கடைசி மெகா ஏலமாக இருக்கும் என்றும், இதுவே ஒவ்வொரு அணிகளின் எதிர்காலம் என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் மிகப் பெரும் திட்டங்களுடன் ஏலத்தில் களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் நாளான இன்றைய தினம் மொத்தம் 161 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள் என்றே கூறப்படுகிறது.

முக்கியமாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால், இதுவரை ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீரர்களுக்கான ஊதியம் போக, மீதி தொகையை கொண்டு தான் இந்த மெகா ஏலத்தில் பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 16 கோடி ரூபாயும், மகிந்திர சிங் தோனி 12 கோடி ரூபாயுக்கும், மொயீன் அலி 8 கோடி ரூபாயக்கும், ருதுராஜ் கெய்க்வாட் 6 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்திருக்கிறார்கள். அந்த வகையில்42 கோடி போக மீதம் உள்ள 48 கோடி ரூபாயை வைத்து தான் சென்னை அணி தங்களுக்கு தேவையான மற்ற வீரர்களை இந்த மெகா ஏலத்தில் வாங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த மெகா ஏலத்தில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது 72 கோடி ரூபாய் கையிருப்பு வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது