நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா என்னும் பெருந் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா தொற்றின் 2 வது அலைகளுக்கு மத்தியில் தான், இந்தியாவில் 14 ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி தொடங்கியது.

இந்த முறை போட்டி தொடங்கும் முன்பும், தொடங்கிய பின்பும் வீரர்கள் சிலரும், நடுவர்கள் சிலரும் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்தனரன்.

எனினும்,  இது வரை 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் கேகேஆர் - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டமானது 2 கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, திடீரென்று ரத்து செய்யப்பட்டது. 

குறிப்பாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், இன்னும் சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு பயோ பபுல் கட்டுப்பாடுகள் கடுமையாக பின் பற்றப்பட்டு வருகின்றன.

அதே போல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

அத்துடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்களில்லாமல், நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கும், கொரோனா பரவியதாகத் தகவல் வெளியாகி, பின்னர் அவர்களுக்கு நெகடிவ் என்றும் கூறப்பட்டது. இதனால், ஒட்டுமொத்த சென்னை அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

அதே போல், சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சஹா மற்றும் டெல்லி அணியின் அமித்மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதனால், இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.

இப்படியாக, ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் தற்போது அதிரடியாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்து உள்ளார்.

மேலும், ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட, புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.