பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மாபெரும் தோல்வியை தழுவி சென்னை ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 53 வது லீக் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளசிஸ் ஜோடி களம் இறங்கினர். ஆனால், பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள், சென்னை அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிப்போனது. 

அடுத்தடுத்து ருதுராஜ் மற்றும் மொயின் அலி அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ், அர்ஷ்தீப் சிங் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதே போல், மொயீன் அலியும், 6 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல், அதே அர்ஷ்தீப் ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

அடுத்து வந்த உத்தப்பா வெறும் 2 ரன்னிலும், பின்னர் வந்த ராயுடு 4 ரன்களில் அவுட்டானார். அதே போல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் வழக்கம் போல், இந்த முறையும் ஏமாற்றினார். இதனால், 12 ஓவர்கள் முடிவில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்து தடுமாறிப்போனது,

இதனையடுத்து, ஜடேஜாவுடன் இணைந்து டூப்ளசிஸ் நிதானமாக விளையாடினார். அதுவரை மிகவும் பொறுமையுடன் விளையாடி வந்த டூப்ளசிஸ், அதிகபட்சமாக 55 பந்துகளில் 76 ரன்களை எடுத்து அவுட்டனார். நடப்பு சீசனின் 14 இன்னிங்ஸ் விளையாடி 546 ரன்களை அவர் எடுத்து உள்ளார். அதன் மூலம் ஆரஞ்சு நிற தொப்பியை தற்போது அவர் வசம் சென்றுள்ளது.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 134 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதனையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் விரட்டி வந்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 139 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எளிதாக எட்டிப் பிடித்தது.

குறிப்பாக, இந்த போட்டியில் பஞ்சாப் அணி ஒருவேளை வெற்றி பெற்றதன் மூலமாக, புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் பெறலாம். ஆனால், அவர்களால் பிளே ஆஃப் முன்னேறுவது கடினம் என்றே கூறப்படுகிறது. 

பஞ்சாபின் மிகக் குறைவான ரன் ரேட் தான் அந்த அணிக்கு மைனஸாக தற்போது இருந்து வருகிறது.

அதே நேரத்தில், சென்னையைப் பொறுத்த வரையில், இந்த போட்டியில் தோற்றாலும், 2 வது இடத்தில் தான் நீடிக்கும். அதற்குக் காரணம், ற்ற அனைத்து அணிகளையும் விட அதிக ரன் ரேட்டை சென்னை அணி ஏற்கனவே எடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியமாக, வரிசையாக 2 போட்டிகளில் தட்டுத்தடுமாறித் தோற்றுக்கொண்டே வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் இதே மாதிரியான மோசமான ஆட்டைத்தை வெளிப்படுத்தினால், இது சென்னை ரசிகர்களுக்கு இன்னும் ஏமாற்றத்தையே அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.