ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மோத உள்ளதால், மிகப்பெரிய சம்பவங்கள் எல்லாம் இன்று நடக்க காத்திருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 35 வது லீக் போட்டி சார்ஜாவில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 10 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

அதாவது, ஐபிஎல் தொடரில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் அணிகள் மோதிக்கொள்ளும் போதெல்லாம், ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே உற்சாகம் மிகுதியாகும். 

அந்த வகையில் சென்னை - மும்பை , சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்றால் அது தான் அன்றைய தினத்தின் ஹாட் டாபிக்காக எகிறி நிற்கும்.

அந்த வகையில் தான், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப் போட்டிகளின் ஒவ்வொரு ஆட்டமும் தற்போது விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த சீசனில் மும்பையை வீழ்த்திய சென்னை, முரட்டு ஃபார்மில் இருக்கும் கொல்கத்தா, ராஜஸ்தானின் எழுச்சி, டாப் கியரில் செல்லும் டெல்லி என இந்த ஐபிஎல் தொடரும் டி20 கிரிக்கெட் பார்வையாளர்களை சிறிதும் ஏமாற்றவில்லை என்றே கூறலாம்.

இந்த நிலையில், இன்று நடைபெறும் 35 வது லீக் ஆட்டம், இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்தில் இருப்பதால், இன்று மிகப்பெரிய தரமான சம்பவங்கள் எல்லாம் நிகழ காத்திருக்கின்றன.

முன்னதாக, இந்த தொடரின் முதல் கட்ட லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது. 

அதே போல் சென்னை அணி பந்துவீச்சில் தற்போதும் பலமாகவே காணப்படுகிறது. ஆனால், பேட்டிங்கை பொறுத்தவரை ஓப்பனிங் அமைத்து கொடுக்கும் அடித்தளத்தை மிடில் ஆர்டரில் வருபவர்கள் பொறுப்புடன் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினால் தான், சிஎஸ்கே பெரிய ஸ்கோரை கட்டி எழுப்பும்.

அத்துடன், கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ரொம்பவே மிரட்டலாக ஆடிய நிலையில், இன்றைய போட்டியிலும் அவர் ஒரு கலக்கு கலக்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, தோனி என மிரட்டல் பேட்ஸ் மேன்கள் இருந்தாலும், இதற்கு முந்தைய போட்டியில் அடுத்தடுத்த ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

மேலும், அம்பத்தி ராயுடு காயத்தில் இருந்து மீண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அவரும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒருவேளை ராயுடு களம் காணவிட்டால், அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா இன்றைய போட்டியில் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. 

இதே போல் ஆல்ரவுண்டர் சாம் கர்ரனை அணியில் சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

பந்து வீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹசில் வுட் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இன்றைய போட்டியிலும் அவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல், பெங்களூரு அணியில் கேப்டன் விராத் கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், கடந்த போட்டியில் அவர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்றே கூறப்படுகிறது. 

எனினும், இன்றையப் போட்டியில் அவர்கள் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விராத் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வழக்கம் என்பதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

அந்த அணியின் பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், ஜாமிசன், முகமது சிராஜ், ஹசரங்கா நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

பெங்களூரு அணி 8 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெறும் 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதனால், இந்த மோசமான தோல்விக்கு பரிகாரம் தேடும் உத்வேகத்துடன் இன்றைய போட்டிக்கு அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

ஆக மொத்தத்தில் இரு அணிகளும் மிக வலுவான நிலையில், சம பலத்துடன் உள்ளதால், இன்றைய போட்டிகள் கடும் மல்லுகட்டு வேடிக்கைகளை காணலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

இந்த இரு அணிகளும் இது வரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதிய நிலையில், சென்னை 18 போட்டிகளிலும், பெங்களூரு 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு அறிவிக்கப்படவில்லை.

குறிப்பாக, இன்றைய போட்டியில் பெங்களூரு அணியோ அல்லது சென்னை அணியோ பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை என்றால், இதுதான் தோனி vs கோலியின் கடைசிப் போட்டியாகக் கூட மாற அதிக வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.