“ஐபிஎல் போட்டியில் தோனியின் வியூகங்கள் எங்கே போனது?” என்று கிரிக்கெட் ரசிர்கள் கேள்வி எழுப்பி உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொதப்பல்களும் மற்றும் தவறுகளும் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டிகள் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கி உள்ளன. இதனால், “சென்னை அணி கோப்பையை வெல்வதைக் காட்டிலும், ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு இருக்கா? என்பதே தற்போது சென்னை ரசிகர்கள் எழுப்பி உள்ள மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. 

அதே நேரத்தில், சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் உள்ளிட்ட அதற்கு முந்தைய போட்டியிலும் தோற்றதின் மூலமாக அது பெரும் விவாத பொருளாக தற்போது மாறியிருக்கிறது. இதன் காரணமாக, இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் செய்த சொதப்பல்களும், தவறுகளும் எந்த அளவுக்கு நிகழ்ந்திருக்கிறது என்பதை ஒரு முறை பார்க்கலாம்.

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை எப்போதுமே சென்னை அணியின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இதுவரை அப்படி தான் இருந்திருக்கிறது. ஆனால், இந்த முறை மட்டும் அது தலைகீழாக மாறியிருக்கிறது.

முக்கியமாக, முன் எப்போதும் இல்லாத அளவில் நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி, வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்து உள்ளது. இதனால், சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியதோடு, புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் இருக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த மோசமான தோல்விக்கு சில காரணங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. 

அதன்படி, கேப்டன் தோனியும், அவரின் ஆளுமையான தலைமையும் தான் சென்னை அணியின் மிகப் பெரிய பலமாக இருந்தது. கிரிக்கெட் உலகின் பவர் ஹிட்டர் மற்றும் கிரேட் ஃபினிஷர் என்ற பெயர் தோனிக்கு உண்டு. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் பலமுறை தன் அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றதோடு, மிகப் சிறப்பாக மற்றும் அதிரடியாக விளையாடி தன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். 

அதன்படியே, கடந்த காலங்களில் சென்னை அணியையும் தனக்கே உண்டான பாணியில் அவர் வழி நடத்திச் சென்றதோடு அதிரடியாகவும் விளையாடி வந்தார். 

ஆனால், இந்த முறை அவருடைய அதிரடியானது போட்டியில் சோபிக்கவில்லை. அதே நேரத்தில் தோனியின் வியூகங்களும் இந்த தொரில் பொய்த்துப் போனது. அவரும் சென்னை அணியின் தோல்விக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பதில்களைக் கூறிக்கொண்டே வருகிறார். சுருக்கமாகச் சொன்னால், இந்த தொடரில் தோனி ஜொலிக்காததால், சென்னை அணியும் ஜொலிக்க வில்லை என்பதே உண்மை.

அதே போல், சென்னை அணியில் இருந்து துணை கேப்டனாக இருந்த சுரேஷ் ரெய்னாவும், அனுபவ வீரரான ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் தனது சொந்த காரணங்களுக்காக, இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகினாலும், அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களைச் சென்னை அணி எடுக்கத் தவறி விட்டது. இதன் காரணமாகவும், சென்னை அணி இந்த முறை ஆட்டம் கண்டு வருகிறது.

முக்கியமாக, கடந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹிர், இந்த சீசனில் ஒரு முறை கூட களம் இறக்கப்படவில்லை. அதே நேரத்தில், அங்குள்ள மைதானங்கள் சுழற்பந்துகளுக்கு ஏற்ற வகையில் இருந்தாலும், அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்த போதும், அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருப்பது மிகப் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தொடரில் ஒவ்வொரு முறையும், திடீர் திடீரென்று ஆட்டத்தின் வியூகங்களை மாற்றிக்கொண்டே இருந்ததும், சென்னை அணியின் சொதப்பலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னை அணியில் பேட்டிங் ஆர்டரில் ஒழுங்கு இல்லாததும், அணியில் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தவறுவதும், தோல்விக்கான காரணங்கள் தெரிந்தும், அதை தற்போது வரை சரி செய்யாமல் இருப்பதும் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

மிக முக்கியமாக, ஃபார்ம் அவுட்டில் இருக்கும் வீரரான கேதார் ஜாதவ், இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் 62 ரன்களை மட்டுமே சேர்த்து உள்ளார். அவரது மோசமான ஃபார்ம் அவுட்டால் அணியில் இருந்து அவர் கழட்டி விடப்பட்ட பிறகும், மீண்டும் அவர் அணியில் வந்து சேர்ந்துகொண்டது, ரசிகர்களை எரிச்சல் அடையச் செய்து உள்ளது. அத்துடன், பல இளம் வீரர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் முறைப்படி வழங்காமல் இருப்பதும் ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. 

இப்படியாக, சென்னை அணியில் இருக்கக் கூடிய குறைகளைச் சரி செய்தால் மட்டுமே, மீதம் உள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற முடியும். அப்படி வெற்றிபெறும் பட்சத்தில் ஒரு வேளை ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை அணி நுழைய முடியும். ஒரு வேளை  ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை அணி நுழையாமல் போனால் கூட, சென்னை அணிக்கு அது டீசெண்டான தோல்வியாகக் கூட இருக்கும். ஒரு வேளை கடந்த கால தவறுகளைச் சென்னை அணி இனியும் சரி செய்ய வில்லை என்றால், ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி பதிவு செய்யும் மிக மோசமான தோல்வியாக விமர்சிக்கப்படும் என்பதே உண்மை.