ஐபிஎல் கிரிக்கெட் ப்ளே ஆஃப் சுற்றில், கடைசி நேரத்தில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையில் உள்ள பிற அணிகளின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
 
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று தற்போது நெருங்கி விட்டது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. ஆனாலும், ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறினாலும் கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கெத்து காட்டி வருகிறது.

ஐபிஎல் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக வெளியேறினாலும், நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலமாக கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் கனவு, தற்போது தகர்ந்து போய் உள்ளது. இதனால், கிட்டத்தட்ட சென்னை அணியைத் தொடர்ந்து கொல்கத்தா அணியும், ஏரக்குறையாக 2 வது அணியாக வெளியேறுகிறது.

அதே போல், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் போன்ற அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால், கொல்கத்தா அணி நேற்றைய போட்டியில் தோற்றாக வேண்டும் என்று நிர்பந்தம் இருந்தது. அதன்படியே, போட்டியும் அமைந்தது. 

அத்துடன், நேற்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான தகுதியைத் தக்க வைத்துக்கொண்டது.

குறிப்பாக, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி நேற்று வென்றதன் மூலம் மும்பை அணி, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஏற்கனவே, 12 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி, 8 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் +1.186 நெட் ரன்ரேட்டும் வைத்து உள்ளது. இந்நிலையில், ப்ளே ஆஃப் ரேஷில் இருந்த கொல்கத்தா தோல்வி பெற்று வெளியேறியதால், மும்பை அணி எளிமையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்று விட்டது. மும்பை அணியானது, இனி வரும் போட்டிகளில் தோற்றாலும் கூட, அந்த அணிக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது. இதன் மூலம், இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, முதலாவதாக ப்ளே ஆஃப்புக்கு நுழைந்து உள்ளது.

அதே போல், 4 வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்று உள்ளது. அதே நேரத்தில், 5 வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்று உள்ளது. இனி, கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் அடுத்து வரக்கூடிய கடைசி போட்டியில் ஜெயித்தால் மட்டும் போதாது. முக்கியமாக, பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் தோற்றாக வேண்டும். அதில், ஒரு போட்டியானது, சென்னை அணியுடன் பஞ்சாப் அணி மோத இருக்கிறது.

மேலும், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் முதல் அணியாக ப்ளே ஆஃப் தகுதி பெற்று விடலாம் என்ற நிலையில் இருந்த பெங்களூரு அணியை, முந்தைய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அதன் கனவையும் சென்னை அணி தகர்த்தது. சென்னைக்கு எதிரான போட்டியில், ஒரு வேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தால், புள்ளி பட்டியலில் 4 வது இடத்தை கைப்பற்றியிருக்கும். இதன் காரணமாக, சென்னையின் இந்த வெற்றியானது, பஞ்சாப் அணிக்கு ஓரளவுக்கு நிம்மதியை தற்போது தந்திருக்கிறது.

அதே நேரத்தில், பஞ்சாப் அணியும் - சென்னை அணியும் கடைசி போட்டியில் மோதிக்கொள்கின்றன. தற்போது, நல்ல ஃபார்மில் இருக்கும் சென்னை அணி போகிற போக்கில் தங்கள் அணியையும் வீழ்த்திவிட்டுச் சென்று விடலாம் என்ற அச்சம் பஞ்சாப் அணிக்கு ஏற்பட்டிருக்கலாம். காரணம், சென்னை அணிக்கு இனி தோற்றாலும் கவலையில்லை. அதனால், தன் இஷ்டம் போன போக்கில் எந்த நெருக்கடியும் இன்றி விளையாடும். ஆனால், பஞ்சாப் அணியைப் பொறுத்த வரை வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இதனால், அந்த அணி சென்னை அணியை வெற்றிகொள்ள மிகவும் போராட வேண்டியிருக்கிறது.

ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் இது வரை 12 போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. இதனால், தற்போதைய நிலவரப்படி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட மும்பை அணியையும், ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்ட சென்னை அணியையும் தவிர, மற்ற அனைத்து அணிகளும் 4 வது இடத்திற்கான போட்டியில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றன. 

குறிப்பாக, ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திடீர் தொடர் வெற்றிகளால் கெத்து காட்டி வருவதன் காரணமாக,  மும்பையைத் தவிர மற்ற அனைத்து அணிகளின் திக்குமுக்காடி உள்ளது. இதனால், மற்ற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பு சென்னை அணியின் கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இனி வரும் போட்டிகள் அனைத்தும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.