“இந்த தோல்வி வலிக்கிறது” என்று கேப்டன் தோனி உருகி உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ்யை “முதியோர் சங்கம்” என்று முன்னாள் வீரர் ஷேவாக் கலாய்த்து உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

துபாயில் நடைபெற்று வரும் 13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 41 வது லீக் ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பந்தாடி அபார வெற்றி பெற்றது. 

போட்டிக்குப் பிறகு பேசிய சென்னை கேப்டன் தோனி, “எது தவறாக செல்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டியது மிக அவசியம். இந்த ஆண்டு எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை” என்று குறிப்பிட்டார். 

“ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக நாங்கள் விளையாடினோம். மற்ற போட்டிகளில் தோற்றதால், அனைத்து வீரர்களும் வேதனை அடைந்து உள்ளனர். ஆனாலும, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்தோம்” என்றும் கூறினார்.  

“விளையாட்டில் எப்போதுமே சாதகமாக நடக்காது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2 வது போட்டியில் பேட்டிங் சரியாக அமையவில்லை. ராயுடு காயம் அடைந்தார். அதே நேரத்தில் மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட வில்லை. பேட்டிங் ஆர்டரில் எங்களுக்குத் தொடர்ந்து அழுத்தங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. நல்ல தொடக்கம் எங்களுக்கு அமையவே வில்லை என்றால், நடு வரிசை பேட்ஸ்மேன்களுக்கு கடும் சிரமம் ஏற்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“கிரிக்கெட்டை பொருத்தவரை கடினமான கட்டங்களை கடந்தே ஆக வேண்டும். நமக்கு சாதகமாக நடக்க வேண்டுமானால், சிறிது அதிர்ஷ்டமும் தேவை. இந்த தொடரைப் பொருத்தவரை, எங்களுக்கான வழியில் எதுவும் அமையவில்லை. ஒட்டு மொத்தமாக 3 முதல் 4 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. இதுவே எங்கள் அணிக்கு இன்னும் கடினமாக அமைந்து போனது.

“அடுத்த ஆண்டு தெளிவான திட்ட மிடல் இருக்க வேண்டும். வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். அடுத்த ஆண்டு தொடருக்கான நல்ல தயார் நிலையாக அடுத்து வரும் 3 போட்டிகளையும் மாற்றம் செய்ய வேண்டும். கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்து விட முடியாது. இதனால், அனைத்து போட்டிகளிலும் நான் விளையாடுவேன் என்று சோகம் கலந்து பேசினார்.

அதே நேரத்தில், “இந்த தோல்வி எனக்கு வலிக்கிறது” என்றும், கேப்டன் தோனி, உருக்கமாகப் பேசினார். 

அதே போல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை “முதியோர் சங்கம்” என்று முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர ஷேவாக் கலாய்த்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், “நடப்பு சீசனின் மிக முக்கியமான போட்டியாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிகள் இருந்தன. இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பையை, சென்னை அணி வீழ்த்தியிருந்தாலும், அதற்கடுத்த போட்டிகளில் சென்னை அணிக்கான வெற்றி வாய்ப்புகள் மங்கியது. இதனால், சென்னை அணியைப் பார்க்க ஏதோ முதியோர் சங்கம் போல் தான் தெரிகிறது” என்று வீரேந்திர ஷேவாக் கலாய்த்திருந்தார். இந்த கலாய், தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏற்கனவே பலரும் டாடிஸ் டீம் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.