இந்திய 20 ஓவர் போட்டியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருவதால், விராட் கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியானது, 5 வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம், ரோகித் சர்மாவின் பதற்றமில்லா சாதுர்யமான கேப்டன்ஷிப் அனைத்து கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து உள்ளது. இது தொடர்பாக, இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை கைப்பற்றியவருமான கவுதம் கம்பீர் கூறும் போது, “ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இல்லா விட்டால், அது இந்திய அணிக்கு இழப்பே தவிர, அவருக்கு அல்ல” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“ஒரு சிறந்த அணியை பெற்றால் தான், ஒரு கேப்டனால் சாதிக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், ஒருவர் நல்ல கேப்டனா? இல்லையா? என்பதை எதை வைத்து மதிப்பிடுவது? இதற்கான அளவு கோல் என்ன? என்று கேள்வி கேட்டால், அதற்கான திறன் மதிப்பீடும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார். 

“ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தனது தலைமையில் இது வரை 5 முறை வெற்றிக் கோப்பைகளை வென்று தனது அணிக்கு பரிசளித்து இருக்கிறார்” என்றும், புகழ் பாடி உள்ளார்.

“தோனியை ஏன் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று சொல்கிறோம்?” என்று அவரே கேள்வியும் எழுப்பி விட்டு, அதற்கான பதிலையும் அவரே கூறியிருக்கிறார். 

“தோனி 2 உலக கோப்பைகளை வென்று கொடுத்து உள்ளார். மேலும், 3 ஐ.பி.எல். கோப்பைகளையும் வென்று சாதித்து உள்ளார். அதே போல், ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக விளங்குகிறார் என்றும், இதனால் குறுகிய வடிவிலான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணிக்கோ, குறைந்தது 20 ஓவர் போட்டிக்கான அணிக்கோ அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும்” என்றும், கவுதம் கம்பீர் வலியுறுத்தி உள்ளார்.

“ஒரு வேளை இது நடக்காவிட்டால், உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானதாக இருக்கும் என்றும், ஒருவரால் இதை விடவும் சாதித்துக்காட்ட முடியாது” என்றும், கவுதம் கம்பீர் சுட்டிக்காட்டி உள்ளார். 

அத்துடன், “கேப்டன்ஷிப்பை கோலி, ரோகித் சர்மாவுக்கு பிரித்து வழங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கலாம் என்றும், இது ஒன்றும் மோசமான யோசனை கிடையாது” என்றும், புதிய ஆலோசனை ஒன்றையும் அவர் வழங்கி இருக்கிறார். 

“வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் தனக்கும், கோலியின் கேப்டன்ஷிப்புக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை ரோகித் சர்மா காட்டி இருக்கிறார்” என்றும், கவுதம் கம்பீர் குறிப்பிட்டு உள்ளார். 

மேலும், “ஒருவர் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வசப்படுத்தி உள்ளார் என்றும், ஆனால் இன்னொருவர் தற்போதைய கேப்டன் விராட் கோலி இது வரை இன்னும் ஒரு தடவை கூட வெற்றி கோப்பையை வெல்லவில்லை என்றும், அதற்காக கோலியை மோசமான கேப்டன் என்று நான் சொல்லவில்லை என்றும், அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

அதே சமயம், “இருவரும் ஒரே சமயத்தில் தான் ஐபிஎல் அணிகளின் கேப்டனாக பொறுப்பேற்றனர் என்றும், இதில் ரோகித் சர்மா தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்துள்ளார்” என்றும், அவருக்கு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணிக்கு கேப்டனாக நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என்றும், கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதே போல், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இது தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள கருத்தில், “கேள்விக்கே இடமின்றி, இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும். வீரர்களை வழி நடத்துவதில் ஒரு அற்புதமான தலைவர் அவர். 20 ஓவர் போட்டிகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது அவருக்கு முழுமையாகத் தெரியும். இதன் மூலம், விராட் கோலியும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன், ஒரு வீரராக நெருக்கடி இன்றி விளையாட முடியும்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

இதனிடையே, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், இந்திய இளம் வீரர்களைத் தொடர்ந்து சீண்டி வந்ததால், கேப்டன் விராட் கோலி அடுத்தடுத்து புதிய புதிய சர்ச்சைகளில் சிக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.