இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய அணியானது, இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் வரும் ஜூலை மாதம் விளையாட இருக்கிறது.

அதன் படி, ஜூலை 13 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை, இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சார்பில் யாரெல்லாம் விளையாடப் போகிறார்கள் என்ற வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டு உள்ளது. 

முக்கியமாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், துணைக் கேப்டன் ரோகித் ஷர்மாவும் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருப்பதால், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த போட்டியில் துணைக் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக, ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்கள் இலங்கை பயணத்திற்கு முற்றிலுமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதன் படி, இளம் தொடக்க வீரர்களான தேவ்தத் படிக்கல், ரூதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இந்திய அணியில் தற்போது இடம் பெற்று உள்ளனர். 

அதே போல், பிருத்வி ஷா, முதல் முறையாக வெள்ளை பந்து ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

மேலும், தற்போது காயத்தில் இருந்து முற்றிலுமாக மீண்ட பாஸ்ட் பவுலர் நடராஜனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

அதே நேரத்தில், கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பவுலிங் செய்த வேகபந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியாவுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அத்துடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்பின் பவுலர் வருண் சக்கரவர்த்தி, யுஸ்வேந்திர சஹால், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், குல்தீப் யாதவ் என ஐபிஎல்லில் அசத்திய இளம் வீரர்கள் இலங்கைக்கு எதிரான போட்டியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இப்படியாக, இலங்கைக்கு எதிரான இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கு 20 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன் படி, ஷிகார் தவான் (கேப்டன்), புவனேஷ்வரா் குமார் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல், ரூதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, யுஸ்வேந்திர சஹால், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், குர்னால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேத்தன் சக்காரியா ஆகியோர், இலங்கைக்கு எதிரான போட்டியின் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஆவர்.