இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது, லண்டன் ஓவலில் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 

இதில், முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 466 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இதில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதம் அடித்து அசித்திய நிலையில், அதிகபட்சமாக 127 ரன்கள் குவித்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து புஜாரா 61 ரன்களும், ரிஷாப் பண்ட் 50 ரன்களும், ஷர்துல் தாக்குர் 60 ரன்களும் எடுத்துனர். 

இதனால், இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடினமான இலக்கை நோக்கி 2 வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 4 வது நாள் ஆட்டம் முடிவில் 32 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்தது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் 31 ரன்னுடனும், ஹசீப் ஹமீத் 43 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று 5 வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில், “291 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம்” என்கிற நிலை இருந்த போது, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடிய நிலையில், அணியின் ஸ்கோர் 100 ரன்களை எட்டியபோது, தொடக்க ஜோடி பிரிந்தது. 

பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். எனினும், மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட்ட நிலையிலும், கடைசி வரையில் ஜோ ரூட் களத்தில் நின்று போராடி வந்தார்.

குறிப்பாக, இங்கிலாந்து அணி, போட்டியை டிரா செய்யும் நோக்கத்துடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர்களால் நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

கேப்டன் ஜோ ரூட் கடைசியில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். 

இதனால், 92.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 210 ரன்கள் எடுத்திருந்த போது, அனைத்து விக்கெட்டுக்களையும் பறிக்கொடுத்தது. 

இதன் காரணமாக, இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டும் எடுத்து அசத்தினர். இந்த போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முக்கியமாக, இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்று உள்ளது.