இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.
 
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே தனி சுவாரஸ்யம் தான்.  இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை காண பாகிஸ்தான் மற்றும் இந்திய ரசிகர்கள் விளையாட்டு மைதானாங்களில் குவிவர். இதனால் தொடக்கம் முதல் இறுதிவரை போட்டி அனல் பறக்கும். 

ஆனால் இருநாட்டு அரசுகளுக்கிடையே சுமூக உறவு இல்லாததால், 2012-க்கு பிறகு, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. கடைசியாக 2012 ஆம் ஆண்டு இந்தியா வந்த பாகிஸ்தான் அணி, 2 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியது. 

s1

இதில் டி20 தொடர் சமனில் முடிய, ஒரு நாள் தொடரைப் பாகிஸ்தான் கைப்பற்றியது. அதன் பிறகு இரு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் எதுவும் நடைபெறவில்லை. அரசியல் காரணங்களால் இரு தரப்பு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறாமலே இருந்து வருகிறது.

ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. சமீபத்தில் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றதால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி மற்றும் மகளுக்கு கூட ட்விட்டரில் மிரட்டல் வந்தது. ஐசிசி தொடரில் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். 

ஆரம்பம் முதலே பலத்துடன் காணப்பட்ட பாகிஸ்தான் அணி அரையிறுதிவரை சென்று, வெளியேறியது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

s4

ஷார்ஜாவில் 40-வது சர்வதேச புத்தக கண்காட்சியில் பேசிய கங்குலியிடம், 9 ஆண்டுகளாக இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பு தொடர் நடைபெறாமல் இருக்கிறது. மீண்டும் எப்போது நடைபெறும்? என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். 

அப்போது பேசிய கங்குலி, “இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுவது, கிரிக்கெட் வாரியங்களின் கையில் இல்லை. இரு தரப்பு தொடர் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.

இரு தரப்பு தொடர் நடத்த வேண்டுமா? வேண்டாமா? என்பதை இரு நாடுகள் தான் முடிவு செய்ய வேண்டும். நானோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராசாவோ முடிவு செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராசா, “இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் தொடரை நடத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லை. இரு தரப்பு தொடரை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஆனால், தற்போது தொடரும் நிலைமை மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என நான் கருதுகிறேன்” என்றார். 

இதற்கிடையில், ஐசிசி அமைப்பின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், ''இரு அணியும் ஐசிசி தொடர்களைத் தாண்டி மோதிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால் இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை'' என்றார்.