2021 ஐபிஎல் 14 வது சீசனில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் வசப்படுத்திய நிலையில், 
அதிக விக்கெட்டுகள், அதிக சிக்ஸர்கள் அடித்தது வீரர்களுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கடந்தாண்டு ப்ளே ஆஃப் வரை கூட முன்னேற முடியாமல் தடுமாறிய நிலையில் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தாண்டு முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதுடன், 4 வது முறையாக கோப்பையை வென்று கம்பேக் கொடுத்து அசத்தி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

இதன் மூலம் “வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..” என்பது போல், தோனியின் மீதான விமர்சனங்களுக்கும் அவரே தற்போது தக்க பதிலடி கொடுத்து அசித்தி உள்ளார்.

அதாவது, 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவுக்கு வந்த நிலையில், இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றதுடன், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட சில விருதுகளையும், பரிசுகளையும் தட்டிச் சென்று உள்ளது.

அதன் படி, இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். ஒரே மேட்சில் அதிக ரன்கள் அடித்தவர்களாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் ஒரு போட்டியில் 124 ரன்கள் எடுத்திருக்கிறார்.

பொதுவாகவே, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுப்பவர்களுக்கு ஆரஞ்ச் தொப்பி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட், 16 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 633 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். இதில், ஒரு சதமும் அவர் எடுத்திருக்கிறார். இவருக்கு கடும் டப் கொடுத்த அதே சென்னை அணியின் வீரர் டூ பிளிசிஸ் 16 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் எடுத்து உள்ளார்.

அதே போல், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பெங்களூரு வீரர் ஹர்சல் படேல் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதற்கு அடுத்த படியாக, டெல்லி வீரர் ஆவேஷ்கான் 16 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி 2 வது இடத்தில் இருக்கிறார். 

இவற்றுடன், இந்த தொடரில் மொத்தம் 4 சதங்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றன.

அதன்படி, சென்னை வீரர் ருத்ராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், பெங்களுருவின் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சதம் விளாசி உள்ளனர். 

குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர்களில் தேவ்தத் படிக்கல் உள்ளார். அவர் 51 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். மும்பை வீரர் இஷான் கிஷன் 16 பந்துகளில் அரை சதம் அடித்ததே அதிவேக அரை சதமாக இருக்கிறது.

குறிப்பாக, ஹர்சல் படேல் ஓவரில் ஜடேஜா எடுத்த 37 ரன்களே ஒரே ஓவரில் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருக்கின்றன.

இஷாந்த் சர்மா அதிக பட்சமாக 2 மெய்டன் ஓவர்களை வீசி உள்ளார். டெல்லி வீரர் ஆவேஷ்கான் 61 ஓவர்கள் வீசி 156 பந்துகளை டாட்  பால்களை வீசி உள்ளார்.

இவற்றுடன், வளர்ந்துவரும் வீரருக்கான விருது கெய்க்வாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

போட்டிகளில் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதற்கான விருதான ஃபேர் ப்ளே அவார்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

அதே போல், சிறந்த கேட்ச் பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ரவி பிஸ்னாய்க்கு வழங்கப்பட்டு உள்ளது.

சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதானது, டெல்லி கேபிடல்ஸ் அணியைச் சேர்ந்த ஷிம்ரன் ஹெட்மயருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
  
அதே போல், அதிக சிக்ஸர் அடித்தவருக்கான விருது பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுலுக்கும், அதிக பவுண்டரிகள் அடித்த வீராருக்கு விருது சென்னை அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.