4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

உலகம் முழுவதும் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு விளையாட்டு என்றால், அது கால்பந்து விளையாட்டு தான். அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் கால்பந்துக்கு உண்டு.

இந்த புட்பால் விளையாட்டிலும் கூட, உலக கோப்பைக்கு அடுத்து மிகப் பெரியதும், பிரபலமானதுமானதுமாகத் திகழ்வது இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் யூரோ போட்டிகள் தான். 

இந்த யூரோ கோப்பை கால்பந்து திருவிழா, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடக்க இருந்த இந்த போட்டிகள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஒரு வருட காலத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அதன் படி, தற்போது இந்த யூரோ கோப்பை கால்பந்து திருவிழா இன்று இரவு முதல் தொடங்குகிறது.

அதன் படி, 16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி, அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

இந்த போட்டியில், மொத்தம் 24 அணிகள் பங்குபெறுகின்றன. இவை, 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன. 

அதன் படி, குரூப் A பிரிவில் துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் இடம் பெற்று உள்ளன.

குரூப் B பிரிவில் டென்மார்க், பெல்ஜியம், ரஷ்யா, பின்லாந்து ஆகிய 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

குரூப் C பிரிவில் நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, நார்த் மேசிடோனியா ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளன.

குரூப் D பிரிவில் இங்கிலாந்து, குரேஷியா, ஸ்காட்லாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகள் இடம் பிடித்து உள்ளன.

குரூப் E பிரிவில் ஸ்பெயின், போலந்து, ஸ்வீடன், ஸ்லோவேகியா நாடுகள் இடம் பிடித்திருக்கின்றன.

குரூப் F பிரிவில் ஹங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் இடம் பெற்று இருக்கின்றன.

குறிப்பாக, லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் டாப் 2 அணிகளும், 3 வது இடம் பிடித்த சிறந்த 4 அணிகள் என மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதி விளையாட உள்ளன. அதில் வெற்றிபெறும் 8 அணிகள் காலிறுதி போட்டியில் விளையாடும். அதன் பிறகு, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்று, விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

முக்கியமாக, இன்று இரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், இத்தாலி அணியை எதிர்த்து துருக்கி அணி விளையாடுகிறது. 

அதாவது, பலம் வாய்ந்த இத்தாலி அணியை எதிர்கொள்ளும் துருக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பதைக் காண உலகம் முழுவதும் உள்ள புட்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள். இதனால், யூரோ கால்பந்து போட்டிகள் இந்திய ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.