”சென்னை அணிக்கு ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு இருக்கா? இல்லையா?” என்று பலரும் இணையத்தில் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடர், தொடங்குவதற்கு முன்பு இருந்தே சென்னை அணியில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. அந்த சர்ச்சைக்குரிய கருத்து யுத்தம் தற்போது வரை சென்னை அணி மீது தொடர்வது தான் கவலைக்குரிய விசயமாக உள்ளது.

நேற்று நடைபெற்ற 34 வது லீக் போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிய நிலையில், இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. 

இதனால், 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 185 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில், அதிகபட்சமாக ஷிகர் தவான் 101 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். ஷிகர் தவானுக்கு இதுவே அவரது முதல் டி20 சதமாகும்.

இந்த போட்டியில் களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல் 5 பந்துகளில் 21 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த போட்டியை தலைகீழாக மாற்றிய கடைசி ஓவரை பிராவோவுக்கு பதிலாக ஜடேஜாவுக்கு பவுலிங் கொடுத்தது தான் முக்கிய காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான காரணத்தைச் சென்னை அணியின் கேப்டன் தோனி விளக்கி இருக்கிறார். 

அதன்படி, “காயம் காரணமாக பிராவோ போட்டியின் பாதியில் இருந்து வெளியே சென்றார் என்றும், அவரால் மீண்டும் விளையாடத் திரும்ப முடியவில்லை” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

“இதன் காரணமாக, சென்னை அணிக்கு 2 ஆப்ஷன்கள் மட்டுமே இருந்தது. ஒன்று கரண் ஷர்மா பவுலிங் போடுவது. மற்றொன்று ஜடேஜா பவலிங் போடுவது.  

இதில், ஜடேஜாவை தேர்வைச் செய்தோம். அது போதுமானதாக இல்லை. அது தவறான முடிவாக மாறிப்போனது. ஷிகர் தவானின் விக்கெட் ரொம்ப முக்கியம் என்று நினைத்தோம். பல முறை அவரது விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை அணியில் பலமுறை தவறவிட்டோம்” என்றும், கேப்டன் தோனி தெரிவித்தார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வியின் மூலமாக, சென்னை அணி தற்போது ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இது தொடர்பாகத் தான் சமூக வலைத்தளங்களில் அனைவரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு தற்போது முற்றிலும் மங்கி உள்ளது என்றே கூறலாம்.

அதாவது, சென்னை அணிக்கு மீதமுள்ள 5 போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், இப்போது உள்ள சென்னை அணியை பொருத்தமட்டில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துமே சொதப்பி வருவதால், அவர்கள் இந்த வருட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிச் செல்வதில் சிரமம் இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

அதே நேரத்தில், கடந்த 2010 ஆம் ஆண்டு இதே போன்ற நிலைமையில் சென்னை அணி இருந்து, அதிலிருந்து மீண்டெழுந்து கோப்பையைக் கைப்பற்றியது. அதே போல், இந்த ஆண்டும் நிகழுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர். 

ஆனால், “அப்போது இருந்த அணி வேறு. இப்போது இருக்கும் அணி வேறு என்றும், நிச்சயம் இந்த ஆண்டு சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை” என்றே பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், தோல்வியின் பக்கத்தில் சென்னை நிற்பது தெளிவாகத் தெரிகிறது.