ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

வரும் ஆக்டோபர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை உலகக் கோப்பை டி20 தொடர் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்து உள்ளது.

அதன் படி, 2021 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சற்று முன்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில், கேப்டனாக விராட் கோலியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பேட்ஸ்மேன்களாக கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

இவர்களுடன் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர்குமார், முகமது சமி ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.

அதே போல், இந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் யாருக்கேனும் எதிர்பாராத விதமாகக் காயம் ஏற்பட்டு விட்டால், அவர்களுக்குப் பதிலாகக் களமிறங்கும் ஸ்டாண்ட் பை பிளேயர் எனப்படும் காத்திருப்போர் பட்டியலில் ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சகர் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.

மிக முக்கியமாக, யாரும் எதிர்பார்க்காத வகையில். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகவும்  ஆச்சரியப்படும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமித்திருப்பது ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று உள்ளது.

அதே போல், கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடாத அஷ்வின், உலக கோப்பைக்குத் தேர்வாகி உள்ளது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எனினும், இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம் பெறவில்லை. 

இதனிடையே, வரும் அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.