2021 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோத உள்ளது தொடர்பாக குரூப்களில் இடம் பெற்ற அணிகளை அறிவித்துள்ளது ஐசிசி. 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மட்டும் மோதும் கிரிக்கெட் தொடர்கள் இரு நாட்டு அரசியல் சூழலை வைத்தே கடந்த காலங்களில் முடிவு செய்யப்பட்டு வந்தன.

அதன் படி, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இந்த இரு அணிகளும், கடைசியாக டெஸ்ட் தொடரில் விளையாடியது கிட்டதட்ட 13 வருடங்கள் கடந்து விட்டன. 

கடைசியாக, கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அதற்கு முந்தைய வருடம் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் சென்று விளையாடியது.

இதனையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காகவும், கடந்த 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிக்காகவும் பாகிஸ்தான் அணி, இந்தியா வந்திருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினையில் பதற்றம் நிலவி வருவதால், எந்த விதமான கிரிக்கெட் தொடரும் இது வரை நடைபெறவில்லை.

இதனால், “இதற்கு முன்பு இருந்ததைப் போலவே, இந்தியாவும் - பாகிஸ்தானும் தங்களது கிரிக்கெட் உறவைத் தொடர வேண்டும்” என்று, பலரும் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

அதற்குக் காரணம், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைத் தான் உலக அளவில் அதிகம் பேர் பார்க்கிறார்கள். ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாகவும் இது இருக்கிறது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பிசிசிஐ நடத்தும் ஐசிசி டி20 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான அணிப் பிரிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த பட்டியலில், இந்தியா - பாகிஸ்தான் 2 ஆம் பிரிவில் இடம் பெற்று உள்ளன. இதனால், இரு அணிகளும் மோதும் போட்டி இந்த முறை ரசிகர்களுக்கு மிகப் பெரிய அளவில் விருந்து படைக்க காத்திருக்கிறது.

அதன் படி, “12 அணிகள் மோதும் 2021 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், குரூப் 1 ல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மற்றும் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் குரூப் ஏ வின்னர் மற்றும் குரூப் பி ரன்னர் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

பிரதான சுற்றில் 2 ஆம் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளன.

அத்துடன், தகுதிச் சுற்றில் குரூப் பி வின்னர் அணியும், குரூப் ஏ ரன்னர் அணியும் இதே பிரிவில் இடம் பெறுகின்றன. 

அதே போல், தகுதிச் சுற்றுகள் பிரிவில் குரூப் ஏ அணிகளாவன இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா அணிகள் இடம் பெற்று உள்ளன. தகுதிச் சுற்று குரூப் பி பிரிவில் பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பபுவா நியுகினி, ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளன.

இதில், தகுதிச் சுற்றுப் போட்டிகளான முதல் சுற்றுப் போட்டிகள் யுஏஇ மற்றும் ஓமனில் நடைபெறுகின்றன. 

சூப்பர் 12 பிரதானச் சுற்றுப் போட்டிகள் அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் நடைபெறும் என்று, ஐசிசி தற்போது அறிவித்து உள்ளது.

குறிப்பாக, இதில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஒன்று நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளது. இந்த போட்டியானது, கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது  குறிப்பிடத்தக்கது.