இங்கிலாந்து சென்று உள்ள இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று நோய் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் 2 வது அலையாக பரவி வந்த நிலையில், தற்போது சற்று ஓய்ந்திருக்கிறது. இதனால், இந்தியாவில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பிக்கொண்டு இருக்கிறது.

ஆனால், இந்தியாவை தாண்டிய சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று 3 வது அலையாக பரவிக்கொண்டு இருக்கிறது. அத்துடன், 4 வது அலைக்கும் சில நாடுகளில் வாய்ப்புகள் உள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் தான், இங்கிலாந்து தொடருக்காக இங்கிலாந்து சென்று உள்ள இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் 2 பேரும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, இருவருக்கும் அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இது தொடர்பாக இருவருக்கும் அடுத்தடுத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், தற்போது ஒருவருக்கு கோவிட் நெகடிவ் என சான்றிதழ் வந்து உள்ளது. ஆனாலும், அவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் இருவருக்கு முதலில், தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து உள்ளன. 

இதையடுத்து, அவர்கள் இருவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அதன்படியே, இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவருக்கும் வேறு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக, கடந்த ஜூன் 23 ஆம் தேதி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வீரர்கள், நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடினார்கள்.

தற்போது, அதன் தொடர்ச்சியாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 

இந்த நிலையில் தான், இந்திய வீரர்கள் 2 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இருப்பது, இந்திய தேர்வு குழுவினர் மற்றும் சக வீரர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அத்துடன், கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற வீரர்களும் மற்றும் ஊழியர்களுக்கு தற்போது கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சமீபத்தில் இங்கிலாந்து சென்று விளையாடிவிட்டு திரும்பிய இலங்கை அணியில், கொரோனா வைரஸ் உள்ளே நுழைந்திருப்பது தெரியவந்த நிலையில், இந்தியா - இலங்கை தொடர் ஜூலை 13 ஆம் தேதியிலிருந்து, ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.