“ஐபிஎல் 2021 போட்டிகள் மீண்டும் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டூப்ளசிஸி, சாம் கரன்” ஆகியோர் இடம் பெற மாட்டார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாகப் பாதியிலேயே நிறுத்தப்பட்ட 14 வது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

அதன் படி, இரண்டாவது பாதி தொடரின் நாளை நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில், 2 அணிகளுமே ஐபிஎல் களத்தில் சம பலம் பொருந்திய அணிகளாகத் திகழ்வதால், நாளை போட்டிகள் ரசிகர்களுக்குப் பெரிதும் விருந்து படைக்கக் காத்திருக்கிறது. இதனால், நாளை போட்டியானது, களத்தில் அனல் பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு அணிகளும் இது வரையில் நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் சீசனில் 4 முறை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

அத்துடன், நடப்பு 2021 சீசனின் முற்பாதியில் சென்னை அணி ஏழு போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் தான், சென்னை அணியின் நட்சத்திர வீரர் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான டூப்ளசிஸ், மும்பைக்கு எதிரான நாளைய போட்டியில் களம் காண்பது சந்தேகமாகி உள்ளது. 

அதற்கு 2 காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. “கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிய போது அவருக்கு ஏற்பட்ட காயம்” முதல் காரணமாக உள்ளன.

அத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் துபாய் வந்த டூப்ளசிஸ், தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால், ஒவ்வொரு வீரரும் குறைந்தது தன்னை தானே 6 நாட்களாவது தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது விதியாக இருக்கிறது. 

இந்த நிலையில், டூப்ளசிஸ் விளையாடுவாரா என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.

அதன் படி, “தற்போது டூப்ளசிஸ் குவாரன்டைனில் இருக்கிறார் என்றும், அது முடிந்ததும் அவரது உடல் திறன் பரிசோதித்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வர முடியும்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

எனினும், “இப்போதைக்கு இது குறித்து கவலை ஏதும் கொள்ளத் தேவையில்லை” என்றும், காசி விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.

அதே போல், இங்கிலாந்திலிருந்து தாமதமாக வந்த சாம் கரன், 6 நாட்கள் கட்டாய குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்பதால், அவரும் நாளைய போட்டியில் இடம் பெற மாட்டார் என்றே கூறப்படுகிறது. 

இந்நிலையில் நாளைய போட்டியில் டூபிளெஸ்ஸிஸ்க்கு பதிலாக ராபின் உத்தப்பா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், சென்னையின் செல்லக்குட்டி சாம் கரனுக்கு பதிலாக, ஹேசல்வுட் விளையாடுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

இந்த நிலையில், நாளைய போட்டிக்கான சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் உத்தேச அணி வீரர்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன் படி, “ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, ஷர்தூல் தாகூர், தீபக் சஹார், லுங்கி நெகிடி, ஜோஸ் ஹேசில்வுட்” ஆகிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடிப்பார்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.