சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ள சாம் கரனுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 14 வது ஐபிஎல் தொடைரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிக சிறப்பாக விளையாடி வருகிறது. 

அதே நேரத்தில், தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றாலும், கடந்த 2 போட்டிகளில் சென்னை அணி எதிர்பாரத விதமாக தொடர்ந்து தோல்விகளையே தழுவி வருகிறது.

கடந்த சீசனில் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கூட தகுதி பெறாமல் வெளியான நிலையில், கடும் சோகத்தில் மூழ்கியிருந்த சென்னை ரசிகர்களுக்கு இந்த சீசன் சற்று ஆறுதல் அளித்திருந்தது.

எனினும், இந்த சீசனில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணி தொடர்ந்து 2 தோல்விகளால் 2 வது இடத்திற்கு சரிந்து உள்ளது, சென்னை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு அதிர்ச்சியாக அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரண் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார்.

அதாவது, கடந்த 2 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான சாம் கர்ரனுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கரன் விலகுவதாக அறிவித்தார். 

அத்துடன், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போதுகூட சாம் கரணுக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்த காரணத்தால், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனாலும், அவருக்கு காயம் குணமடைய வாய்ப்பில்லை என்ற காரணத்தினால், ஐபிஎல் 14 வது சீசனிலிருந்து விலகுவதாக தற்போது அவர் அறிவித்து உள்ளார். 

இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ள அவர், “எதிர்பாராத விதமாக விலகும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றும், டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்தும் நான் தற்போது விலக உள்ளேன் என்றும், இந்த முறை நிச்சயம் சிஎஸ்கே கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், சிஎஸ்கே அணியின் கீ ப்ளேயராக திகழ்ந்த சாம் கரண் விலகல் காரணமாக, அவருக்கு மாற்றாக ஒரு வீரரை களமிறக்க வேண்டிய சூழலுக்கு சென்னை அணி தள்ளப்பட்டது. 

பிசிசிஐ விதிமுறைப்படி, கடைசி லீக் போட்டிக்கு முன்புவரை மாற்று வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்பது விதியாகும்.

அந்த வகையில் சாம் கரணுக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸை, சிஎஸ்கே அணி தற்போது ஒப்பந்தம் செய்திருக்கிறது.

அதன்படி, தற்போது சென்னை அணிக்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிக்கும் டாம்னிக் ட்ரேக்ஸ், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் நெட் பவுலராக செயல்பட்டு வருகிறார். 

இதன் காரணமாக, டாம்னிக் ட்ரேக்ஸ் தற்போது மும்பை அணியின் பயோ பபுளில் தான் இருந்து வருகிறார் என்பதால், சென்னை அணியில் இணைந்து விளையாடுவதில் அவருக்கு எந்தவித தாமதமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த கரிபியன் பிரீமியர் லீக் தொடரில், செய்ண்ட் கிட்ஸ் அணிக்காக விளையாடிய டாமினிக் ட்ரேக்ஸ் 16 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அந்த தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றியோர் பட்டியலில் இவர்  4 வது இடத்தையும் பிடித்தார். 

குறிப்பாக, இவர் பேட்டிங்கிலும் பவர் ஹிட்டராக இருந்து வருவதால், சென்னை அணிக்கு நல்ல தேர்வாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், சென்னை அணி வேகம் குறையாமல் அதே உத்வேகத்துடன் தொடர்ந்து வெற்றிவாகை சூடும் என்றே கணிக்கப்படுகிறது.