ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் தங்களது ஷூவில் குளிர்பானம் ஊற்றி குடித்த காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் நேற்று இரவு மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, நியூசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் விளையாடிய  நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போது, நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் அதிரடியாக சேர்த்தார். 

இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் உலக கோப்பையை வெல்லலாம் என்ற புதிய உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கிய நிலையில், தொடக்கத்தில் சற்று சறுக்கினாலும் போக போக அந்த அணி அதிரடி காட்டி பேய் அடி அடித்தது. 

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் அதிரடியான மற்றும் மிக சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தார். அதன் படி, 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து வார்னர், ஆட்டமிழந்தார்.

அதே நேரத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்சேல் மார்ஷ், அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, முதல் முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றிக்கு பிறகு, கோப்பையை பெற்றுக்கொண்டு தங்களது ஓய்வு அறைக்கு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்கள், ஓய்வு அறையில் வெற்றி கொண்டாட்டத்தில் துள்ளிக்குதித்தனர். 

அப்போது, வெற்றி கொண்டாட்டத்தின் உச்சக்கட்டமாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் இருவரும் தங்களது ஷூவில் குளிர்பானத்தை ஊற்றி குடித்தனர். இந்த காட்சிகள் யாவும், வீடியோவாக வெளியாகி, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது இணையதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.