இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் ஒரே இன்னிங்சில் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து  அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் 2-வது டெஸ்ட் மற்றும் கடைசிப் போட்டி நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்திருந்தது. 

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 62 ரன்களுக்கு  சுருண்டுள்ளது. இந்திய அணி வீரர்களில் அஸ்வின் எட்டு ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்கள் எடுத்ததுதான் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அந்த அணி எடுத்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர். ஓர் அணியாக நியூசிலாந்துக்கு இது மகிழ்ச்சிகரமான செய்தி இல்லை என்றாலும் நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் கவனிக்கத் தகுந்த சாதனை ஒன்றை இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸ் போட்டியில் படைத்துள்ளார்.

CRICKET AZAZ PATEL

இதற்கு முன்னதாக இரண்டு வீரர்கள் மட்டுமே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்ற சாதனையை படைத்திருந்தனர்.  அந்த வரிசையில் தற்போது நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேலும் சேர்ந்துள்ளார். 

அதன்படி 1956 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லெகர் 53 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தார். 

ஜிம் லெகருக்கு அடுத்தபடியாக 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே 76 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஜிம் லேகர், அனில் கும்ளே இடம்பெற்றுள்ள சாதனை பட்டியலில் 3-வது நபராக நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் இணைந்துள்ளார். 

அவர் குறித்த சில சுவாரசியமான தகவல்களை இங்கே பார்க்கலாம். சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேல் இந்தியாவில் பிறந்தவர். 1988 ஆம் ஆண்டு அப்போதைய பம்பாய் நகரில் (இன்றைய மும்பை) பிறந்தார். இன்று அதே மும்பை மண்ணில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தாம் பிறந்த மும்பை மண்ணிலேயே 25 ஆண்டுகளுக்குப் பிறகு இதைச் செய்திருப்பது தமக்கும் தமது குடும்பத்துக்கும் சிறப்பான தருணம் என்று அஜாஸ் பட்டேல் கூறியுள்ளார். இவரின் எட்டாம் வயதில் இவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடியேறியது. அடுத்த சில ஆண்டுகளில் ஆக்லாந்து கிரிக்கெட் அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் அஜாஸ் பட்டேல் விளையாடத் தொடங்கினார்.

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அஜாஸ் பட்டேல் விளையாடத் தொடங்கினார். அதே 2018 ஆம் ஆண்டு முப்பதாவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகத் தமது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் அஜாஸ் பட்டேல்.

AZAZ PATEL CRICKET

தாம் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதைப் பெற்று அனைவரின் கவனத்தையும் அஜாஸ் பட்டேல் ஈர்த்தார். அந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். 

பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபுதாபியில் நடந்த அந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற இது மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த போட்டி அல்லாமல் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளிலும் ஏழு டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.  ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் பட்டேலுக்கு தற்போது வயது 33 என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை புரிந்த அஜாஸ் பட்டேலுக்கு, மும்பை ரசிகர்களும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் எழுந்து நின்று கை தட்டி மரியாதை செய்தனர். மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட், முன்னாள் சாதனையாளர் அனில் கும்ப்ளே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.