“தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்து, தமிழக மக்களை காப்பேன்” என்று, சேலம் மாவட்டம் எடப்பாடியில் சசிகலா சூளுரைத்துள்ளது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, 2017 ஆம் ஆண்டு பொதுக் குழுவில் நீக்கி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், “அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்றும், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததும்” சென்னை 4 வது உரிமையியல் நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுக்கள் மீதும், சென்னை உரிமையியல் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். 

அதே போல், சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை உரிமையியல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தள்ளுபடி செய்து உள்ளது. இதனை சசிகலா மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தான், சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிக்கு நேற்று இரவு சென்ற சசிகலா, அங்கு தனது வாகனத்தில் இருந்தபடியே “அதிமுகவின் உண்மையான தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் அதிமுகவின் ஆட்சி அமைத்து, தமிழக மக்களை காத்திடுவேன்” என்று, உரக்கச் சொல்லி, சூளுரைத்தார்.

அதாவது, சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு நேற்று இரவு சென்ற சசிகலாக்கு, எடப்பாடி தொகுதியில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அழிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் மலர்தூவி பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். 

அதன் பிறகு, எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்து உள்ள சின்னாண்டி பக்தர் சிலை, ராஜாஜி சிலை மற்றும் காமராஜர் சிலை ஆகியவற்றிற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதைத் தொடர்ந்து, அங்குள்ள நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, எடப்பாடி தொகுதியில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உரையும் ஆற்றிய சசிகலா, “எம்ஜிஆர், அதிமுக இயக்கத்தை ஆரம்பித்தார். அவரை தொடர்ந்து ஜெயலலிதா இயக்கத்தை வளர்த்தெடுத்தார். அவர்களுடன் ஆரம்ப காலத்திலிருந்து கொங்கு மண்டல மக்கள் அதிமுகவிற்கு மிகப் பெரிய ஆதரவு கொடுத்து வந்தனர். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்” என்று, குறிப்பிட்டார்.

“எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக இயக்கம், எத்தனையோ இடர்பாடுகள் தாண்டி வளர்ந்து வந்திருக்கிறது” என்றும், சுட்டிக்காட்டினார்.

மேலும், “ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும், இல்லா விட்டாலும் ஏழை மக்களுக்காக அதிமுக இயக்கத்தினர் உழைந்தார்கள் என்றும், மக்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தார்கள்” என்றும், கூறினார். 

அத்துடன், “அதிமுக தொண்டர்களால் தான் இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்றும், உண்மை தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் அதிமுகவின் ஆட்சி அமைத்து, தமிழக மக்களை காத்திடுவேன். இது உறுதி” என்றும்,  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் சசிகலா சூளுரைத்தார். 

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தொகுதியில் சசிகலா சூளுரைத்த நிகழ்வு, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.