4 நாள் பயணமாக டெல்லி சென்று உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகமான “அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா” வரும் 2 ஆம் தேதி நடைபெற இருப்பதால், இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற முதலமைச்சருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் படி, டெல்லியில் இன்றைய தினம் பிற்பகல் நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருப்பதாக அதிகாரப் பூர்வனமா தகவல்கள் வெளியான நிலையில், பிரதமர் உடனான இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த சந்திப்பின் போது “தமிழகத்துக்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதியை உடனடியாக விரைந்து வழங்க வேண்டும்” என்று வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், “மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி நிலுவை தொகையை முழுமையாக தரவேண்டும்” என்றும், முதல்வர் வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

இவற்றுடன், “கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை” பிரதமர் மோடியிடம் முதல்வர் வலியுறுத்த இருக்கிறார், என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.

குறிப்பாக “நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுவதுமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் முதல்வர் மீண்டும் வலியுறுத்துவார்” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் “அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கும் மோடியும் கலந்துகொள்ளும் வகையில் முதல்வலர் அழைப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இன்றைய தினம் பிரதமர் உடனான இந்த முதல் சந்திப்பு முடிந்ததும், அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிற்பகல் 2.30 மணிக்கு  மேல் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரியை சந்தித்து, அவரிடமும் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் குறித்து வலியுறுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, இந்த சந்திப்பின்போது “தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி இருப்பதால், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள்” அவர் முன்பு வைக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாகவே, பிற்பகல் 3.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். 

அமித்ஷா உடனான இந்த சந்திப்பினாது, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி, அதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தப்படும் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, மாலை 4.30 மணிக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அவரது வீட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். 

மேலும், நாளைய தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

பின்னர், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். 

இப்படியாக, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசும் இந்த இடைப்பட்ட நேரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி உள்ளார். 

அதே நேரத்தில், டெல்லியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் முதல்வர மு.க.ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.