“தமிழக போலீசாரை தாக்கிய வட மாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழகத்தில் வட மாநிலத்தவர்களை கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை கட்டாயப்படுத்த வேண்டும்..” என்று, வலியுறுத்தி உள்ளார்.

அதாவது, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்து உள்ள நஞ்சை ஊத்துக்குளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, தமிழக போலீசாரை மிக கடுமையாக தாக்கியதால், 7 போலீசார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, அப்பகுதி முழுவதும் பெரும் கலவரமாக மாறிய நிலையில், அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. பின்னர், இந்த கலவரத்தில் ஈடுபட்ட 40 வட மாநில போலீசாரை போலீசார் அதிரடியாக கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், “தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரால் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீரழிவினைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாட்டில் உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று, சீமான் வலியுறுத்தி உள்ளார்.

அது குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வட மாநில இளைஞர்களால் காவல் துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன் என்றும், தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

“கடந்த சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையானது, பல லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது என்றும்; சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் 2 ஆம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்றும், சீமான் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது என்றும், அவ்வாறு வேலைக்கு வரும் வட மாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழ்நாட்டில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது” என்றும், கூறியுள்ளார்.

“இதனால், தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மெல்ல மெல்ல மாறி வருகிறது” என்றும், சீமான் கவலைத் தெரிவித்து உள்ளார்.

“இவை மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் வட மாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்றும், இதனால் மேற்கு மாவட்டங்களில் பொது மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழும் கொடுஞ் சூழலே நிலவுகிறது” என்றும், வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “நாளுக்குநாள் அதிகரித்த அத்தகைய குற்றச் செயல்களைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கே, தற்போது காவல் ஆய்வாளர் உட்பட 7 காவல் துறையினரையே கண் மூடித்தனமாகத் தாக்கி கட்டுக்கடங்காத உச்சகட்ட வன்முறையில் ஈடுபடும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணம்” என்றும், சீமான் காட்டமாக பதிவு செய்து உள்ளார்.

இதனால், “தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழித்துக்கொண்டு, தமிழ் நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை, பணி புரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் உடனடியாக உள் நுழைவு அனுமதிச் சீட்டு (ILP – Inner Line Permit) முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும், வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “அதிகரித்து வரும் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” என்றும், சீமான் தெரிவித்து உள்ளார்.