“அதிமுக தலைவர்கள் தொடர்பில் இருக்கிறார்களா?, ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டுதான் இருக்கிறரா?” உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு சசிகலா மனம் திறந்த பதில் அளித்து உள்ளார்.

“சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்” என்கிற ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அதன் சாரம்சமாகவே, “அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள்” என்று, சசிகலா கூட, கடந்த காலத்தில் பேட்டி கொடுத்திருந்தார். 

அதன் தொடர்ச்சியாகவே, சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசினார். இது, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்தே, “ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்கு தெரிந்த உண்மையானது, தற்போது ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரிய வந்தது” என்றும், சசிகலா பேசினார். இதுவும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சசிகலா, அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். 
அப்போது சசிகலா, “அதிமுகவில் தற்போது இருப்பவர்களை மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுடன் ஒப்பிட முடியாது” என்று, குறிப்பிட்டார்.

“ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு தலைவரை கட்சித் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும். அவர் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இருந்தால் தான் அந்த தலைமையின் கீழ் அனைவரும் கட்டுப்பட்டு இருப்பார்கள்” என்றும், சசிகலா சுட்டிக்காட்டினார். 

அத்துடன், “அதிமுக இது போன்ற நிலையில் இல்லை என்றும், பதவிக்காக அதிமுக வில் சிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர்” என்றும், குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “அதிமுக தற்போது சரியான எதிர் கட்சியாக செயல்படவில்லை” என்றும், சசிகலா பகிரங்கமாகவே தனது கவலையை வெளிப்படுத்தினார். 

முக்கியமாக, “ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை என்றும், தொண்டர்கள் விரும்பும் போது நான் அதிமுகவில் இணைவேன்” என்றும் பேசிய சசிகலா, “அதிமுக வில் என்னை இணைக்க முடியாது என்று சொல்வதற்கு மற்றவர்கள் யார்?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

அதே போல், “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் தற்போது வரை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும், அவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது” என்றும், சசிகலா பேசினார்.

மிக முக்கியமாக, “ஓ.பன்னீர்செல்வம் உங்களிடம் பேசினாரா?” என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு, “நான் எப்படி இவ்வளவு பேரிடமும் இதனை சொல்ல முடியும்?” என்று, வெளிப்படையாகவே கேட்டு விட்டு சிறிது நேரம் சசிகலா சிரித்தார். 

இதனிடையே, சசிகலாவின் பேட்டி, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.