“செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்” என்று, தேனொழுகும் தமிழில் சென்னையில் பேசி அசத்திய பிரதமர் மோடி, தேசிய கல்வி கொள்கை குறித்து தீவிரமாக பேசினார்.

தமிழகத்தில் 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, சென்னை வருகை தந்த பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு பேசிய பிரதமர் மோடி,  “வணக்கம்” என்று, தமிழில் உரையை தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக “தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது” என்றும், தமிழின் பெருமைகளை பிரதமர் மோடி பேசினார்.

பின்னர், “தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளே வணக்கம்” எனக் கூறி தனது உரையை மோடி தொடங்கினார். 

அதன்படி, பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாடு மண் என்பது சிறப்பு வாய்ந்தது. தமிழ்நாட்டின் கலாசாரம் மக்கள், மொழி எல்லாமே இங்கு சிறப்பு வாய்ந்தவை. தமிழ்மொழி நிலையானது, நித்தியமானது, தமிழ் கலாசாரம் உலகளாவியது.

சென்னை, கனடா, மதுரை, மலேசியா, நாமக்கல், நியூயார்க், சேலம், தென் ஆப்பிரிக்கா வரை தமிழ் கலாசாரம் திகழ்கிறது” என்று, தமிழ் பெருமைகளை வரிசையாக அடிக்கொண்டே போனார்.

குறிப்பாக, “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே..” என்ற, பாரதியார் பாடலை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி, பேசத் தொடங்கினார்.

“தமிழ் மொழி பழமையானது. ஆனால், சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலை சிறந்தவராக விளங்குகிறார். நாம் வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பங்கு உள்ளது. செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் சாதனை படைத்துள்ளனர்” என்று, தமிழகத்தின் பெருமைகளை, அவர் பட்டியலிட்டார்.

“அத்துடன், 

- தமிழ்நாட்டில் ரூ.31,000 கோடியிலான திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
- பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. 
- மதுரை - தேனி அகல ரயில்பாதை விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். 
- சாலைத் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியோடு நேரடி தொடர்புடையவை. 
- எதிர்கால தேவையை நோக்கமாகக் கொண்டு நவீனத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. 
- கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் வீடுகள்
- எரிவாயு குழாய் திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது” என்றும், பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

மேலும், “தலைசிறந்த உட்கட்டமைப்பு வசதிகளால் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை அளிக்கமுடியும் என்றும், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை தலையான நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறது இந்திய அரசு” என்றும், அவர் பேசினார். 

“உட்கட்டமைப்பு மீது கவனம் செலுத்துவதால் இந்தியாவின் இளைஞர்கள் பெரும் பயன்பெறுவர் என்றும், சமூக கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் ஏழைகளின் நலனை உறுதி செய்ய முடியும் என்றும், திட்டங்கள் அனைவரையும் சென்று சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம்” என்றும், பிரதமர் பேசினார்.

“ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரை கொண்டுசெல்ல பணியாற்றுகிறோம் என்றும், ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இணைய சேவையை கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு உள்ளோம்” என்றும், பிரதமர் குறிப்பிட்டார்.

“அதிவேக இணைய சேவை, எரிவாயு வழித்தடம், சாலை கட்டமைப்பு என புதிய பாதைகளில் வளர்ச்சிக்காக பயணிக்கிறோம் என்றும்,  7.5 லட்சம் கோடி ரூபாய் மூலதன செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, “தேசிய கல்விக்கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்றும், பனாரஸ் பல்கலைக்கழகம் எனது தொகுதியான வாரணாசியில் உள்ளது என்றும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது” என்றும், பேசினார். 

அத்துடன், “தேசிய கல்விக்கொள்கையால் மருத்துவம், தொழில் நுட்ப படிப்புகளை தாய் மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும்” என்றும், மோடி சுட்டிக்காட்டினார்.

“இலங்கைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர் உள்ளிட்ட அனைவருக்கும் உதவிகள் செய்யப்படும்” என்றும், பிரதமர் மோடி உறுதி அளித்தார்.