“இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கம் கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தலாக பேசியது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அதன் படி, சென்னையில் ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விழா தற்போது நடந்துகொண்டு இருக்கிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடியின் முன்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திறப்பு விழாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, வரவேற்றார்.

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று பின்பு, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க கூடிய முதல் அரசு விழா இது” என்றும், பெருமையோடு குறிப்பிட்டார்.

“இந்த விழாவின் மூலமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பாகவும், தமிழக முதல்வராகவும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மீண்டும் குறிப்பிட்ட முதல்வர், “இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது” என்றும், பெருமையோடு பேசினார்.

“கல்வி, மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகைகளில் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு அளித்து வருகிறது என்றும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழக மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது” என்றும், சுட்டிக்காட்டினார். 

அத்துடன், “மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட, தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமானது.” என்றும், பெருமையோடு பேசினர் முதல்வர்.

“தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியானது, பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி” என்றும், முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார். 

“தமிழகத்தின் வளர்ச்சியே திராவிட மாடல் என்றும், அனைவரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சியை தான் திராவிட மாடல் ஆட்சி என்று, நாங்கள் குறிப்பிடுகிறோம்” என்றும், பிதமர் மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

குறிப்பாக, “நமது நாட்டின் வளர்ச்சியிலும், ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு மிக முக்கிய பங்களிப்பை தருகிறது என்பது பிரதமருக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன்” என்றும், முதல்வர் குறிப்பிட்டார்.

மேலும், “பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வராக நான் சில கோரிக்கைகளை வைக்கிறேன்” என்று பேசிய முதல்வர், “மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்” என்று, வலியுறுத்தினார்.

அதே போல், “சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்றும், அதற்கு இதுவே சரியான தருணம்” என்றும்,  பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

முக்கியமாக, பிரதமர் முன்னிலையில் “திராவிட மாடல், கூட்டாட்சி, வரிப் பகிர்வு, மாநில உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அதன்படி, “வணக்கம்” என்று, தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. 

மேலும், “தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது” என்றும், தமிழின் பெருமைகளை பிரதமர் மோடி பேசி வருகிறார்.

குறிப்பாக, “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற, பாரதியார் பாடலை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி, தற்போது பேசி வருகிறார்.