மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.கவினர் தங்களது இல்லங்களில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து, ”உயிர்மூச்சு உள்ளவரை கட்சியை காப்பேன்” என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அவர்கள் கூறியது, ‘’ எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க அடிபிறழாமல் பயணித்து உலக அளவில் உள்ள மக்கள் இயக்கங்களில் மாபெரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். அ.தி.மு.கவை தாய்போல் சீராட்டி காப்பாறிய மாண்புமிகு அம்மா இம்மண்ணுலகைவிட்டு பிரிந்தாலும் அவரது ஆன்மா தொண்டர்கள் அனைவரின் செயல்களையும் கவனித்து நன்மை செய்வோரை ஆசிர்வதித்தும் தீமை செய்வோரை அறத்தின் வழி நின்று அழித்தும், ஒழித்தும் அ.தி.மு.கவை காத்து வருகிறது.

 
அ.தி.மு.க தொண்டர்களின் விசுவாசம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் அ.தி.மு.கவிற்கும், மக்களுக்குமே தவிர அதை யாரும் விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ வாங்க முடியாது என்பது நாம் அறிந்தது.  

நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் தங்களது உழைப்பாலும், ஒற்றுமை உணர்வாலும் எதிரிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை கற்பிக்க வேண்டும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று தொண்டர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் மாலை 6 மணிக்கு தீபத்தை ஏற்றி பிரார்த்தனை செய்து, உயிர்மூச்சு உள்ளவரை அ.தி.மு.கவை காப்பேன் - இது அம்மா மீது ஆணை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் ‘’ என்று  ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக எழுதியுள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளனர்.