நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அவர் பேசியது, ‘’ மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி பணி தொடங்கவுள்ளது. பட்டா  மற்றும் மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா. பசுமை திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு 800 கான்கிரீட் வீடு கட்டித் தரப்படவுள்ளது. கூடலூர் தொகுதியில் 8 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டுள்ளன.


கூடலூரில் பல ஆண்டுகளாக உள்ள நில பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பொய் பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினை இந்த தேர்தலிலும் மக்கள் புறக்கணிப்பார்கள். அதிமுக-வை குறை கூற மட்டுமே ஊர் ஊராக சென்றுக்கொண்டு இருக்கிறார். திமுக ஆட்சி மீண்டும் வந்தால் தமிழகம் மீண்டும் இருண்ட காலத்துக்கு சென்று விடும்.  


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனது தலைமையிலான அரசு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது. பல துறைகளில் சாதனை படைத்து அதற்காக ஏராளமான விருதுகளை வாங்கியதும் தமிழக அரசு தான். ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால், செழிக்க வேண்டுமானால் அமைதி, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். தற்போது நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இடம் வாங்கி ஏழைகள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும். கூடலூர் தொகுதி சுற்றுலா தலமாக மாற்றப்படும். ”என்றார்.