டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை சந்திப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அமித் ஷாவுடனான சந்திப்பு நிகழவில்லை. இதனையடுத்து பிரதமருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’பிரதமருடனான இந்த சந்திப்பில் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மட்டுமே பேசப்பட்டது என்று தெரிவித்து உள்ளார்.


புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுத்தேன். காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதியுதவி குறித்து பேசியுள்ளேன். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மற்றும் தொடர் மழையால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிவாரண நிதி குறித்தும் பேசினேன். நெல் கொள்முதலுக்கான ஆதார விலையை உயர்த்துவது குறித்தும் கேட்டுள்ளேன். 


திமுகவிற்கு சாதகமானவர்களால் கருத்துகணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக நிச்சயமாக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும். சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை” என தெரிவித்து உள்ளார்.