சென்னையில் ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதல்வர் மு.க. ஸ்டாலின் நிற்க, “தளபதி வாழ்க, பாரத் மாதா கி ஜே..” என்று,  திமுக - பாஜக தொண்டர்கள் போட்டி போட்டிக்கொண்டு மாறி மாறி கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க சற்று முன்னதாக சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் விழாவில் கலந்துகொண்டு உள்ளார். தற்போது, இந்த நலத்திட்ட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதாவது, ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை, சென்னை விமான நிலையத்தி ஆளுநர் ரவி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை ஐ.என்.எஸ். விமான படைத் தளத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரவேற்பதற்றார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள புறப்பட்டுச் சென்றார். 

அப்போது, பிரதமர் மோடியை வரவேற்க வழியெங்கும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில், பாஜக வினர், பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதனால், தமிழகம் முழுவதிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் சென்னைக்கு வந்த நிலையில், வழி எங்கும் பாஜக கொடிகளோடு தாரை தப்பட்டை முழங்க பிரதமர் மோடியை வரவேற்க திரண்டு நின்றனர்.

அதன்படி, மோடி வரும் வழியெங்கும் மேளதாளம், கலை நிகழ்ச்சிகள், பதாகைகள் என பல்வேறு விதங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது, பிரதமர் மோடியின் பின்னால் முதல்வரும் வருகை தந்தார். இதனால், பிரதமர் வந்த வழியெங்கும் பெரும்பாலும் பாஜகவினர் சூழ்ந்திருந்த நிலையில், திமுக தொண்டர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் திரண்டு நின்று, “வாழ்க வாழ்க.. பெரியார் வாழ்க.. டாக்டர் கலைஞர் வாழ்க.. முதல்வர் வாழ்க.. தளபதி வாழ்க..” என்று, திமுக வினர் ஒரு பக்கம் முழக்கமிட்டனர்.

இதனால், அதற்கு பதிலடி தரும் விதமாக, “பாரத் மாதா கி ஜே” என்று, பாஜகவினர் பதில் முழக்கமிட்டனர். 

இவற்றுடன், “நாளைய முதல்வர் அண்ணாமலை வாழ்க” என்று, பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். 

இந்த சமயத்தில், திமுக கொடிகளும் - பாஜக கொடிகளும் அருகருகே இருப்பது போல் காட்சிகள் அமைந்திருந்தன. 

எனினும், நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கி தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி.

அதே போல், நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, சற்று முன்னதாக நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்தார். 

அப்போது, பிரதமர் மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் நிற்க, திமுகவினர் மற்றும் பாஜவினர் மாறி மாறி “மோடி வாழ்க.. முதல்வர் வாழ்க” என்று, இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் மாறி மாறி முழக்கமிட்டனர். இதனால், அங்கு சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.