கோவை மாவட்டம் தேவராயபுரம் பகுதியில் தி.மு.க சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் வேலுமணி உள்ளாட்சித்துறையில் செய்த ஊழல்கள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.

 
அப்போது, கூட்டத்தில் தி.மு.க தொப்பியுடன் அமர்ந்திருந்த ஒரு பெண் திடீரென்று எழுந்து, ஸ்டாலினிடம் கேள்வி கேட்க முயன்றார். அதற்கு ஸ்டாலின், `நீங்கள் யார்... எந்த ஊர்.?’ என்று  கேட்க,`இதுவே தெரியாமல், எதற்கு வந்தீர்கள்... எதற்காக கிராமசபைக் கூட்டம் நடத்துகிறீர்கள்... கொரோனா காலகட்டத்தில் நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்..?' என்று பேச , `மேடம்... உங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அமைச்சர் வேலுமணி அனுப்பின ஆளு நீங்க. போலீஸைக் கூப்பிடுங்க. அவங்களை வெளிய அனுப்புங்க' என்றார் ஸ்டாலின். 


அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்த பெண் ஸ்டாலின் ஒழிக, திமுக ஒழிக என்று கோஷம் எழுப்பிக்கொண்டே வெளியில் சென்றார். அந்த பெண் அ.தி.மு.க-வில் தெற்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். 


அந்தப் பெண் வெளியேற்றப்பட்டவுடன் பேசிய மு.க.ஸ்டாலின், ``மிஸ்டர் வேலுமணி .. ஊழல்மணி அவர்களே, இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இது தொடர்ந்தால் நீங்கள் மட்டுமல்ல. உங்க முதலமைச்சரும் எங்கேயும் பேச முடியாது. அதுதான் மரியாதை. தைரியம் இருந்தால் அ.தி.மு.க என்று சொல்லி உட்கார வேண்டியதுதானே எதற்காக தி.மு.க-வின் தொப்பியை அணிந்துகொண்டு உட்கார வேண்டும்?” என்றார்.