“தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதா” என்று, விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், “மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்கவில்லை” என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி கவலை தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில் தான், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அதன் படி, சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மின்தடை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

அதே போல், “மயிலாடுதுறையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக” குற்றம்சாட்டிய அப்பகுதியினர் அங்கள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

அப்போது, “தடையின்றி மின்சாரம் விநியோகிக்குமாறு” அவர்கள் அனைவரும் கண்டன முழக்கமிட்டனர்.

குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதாகக் கூறி, மின்வாரிய அலுவலகம் மீது சிலர் கல்வீசி தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறிதது அங்குள்ள மின்வாரிய அலுவலர் பாதுகாப்புக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படியாக, அடிக்கடி மின்சாரம் தடை படுவதால், மின் விசிறிகள் இயங்காமல், முதியோரும் பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்போரும் தவிப்பதாக, பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இப்படியாக, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 

இந்த விவகாரம், தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ள நிலையில், “மாநிலத்தில் ஏற்படும் மின்வெட்டுக்கு முக்கிய காரணம், மத்திய அரசு தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 MW மின்சாரம் தடைப்பட்டது தான் முக்கிய காரணம்” என்று, அமைச்சர் செந்தில் பாலாஜி, கவலைத் தெரிவித்து உள்ளார்.

அதன் படி, சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “வெளி மாநிலங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக” குறிப்பிட்டார். 

மேலும், “தமிழகத்தில் இந்த ஆண்டில் 29.3.2022 வரை 17,196 மெகா வாட் மின் தேவை ஏற்பட்டது. அதை முழுவதும் பூர்த்தி செய்தோம். ஏப்ரல் மற்றும் மே மாதத்தை சமாளிக்கவும் தேவைக்கு ஏற்ப கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு அதையும் விநியோகம் செய்தோம்” என்று, குறிப்பிட்டார்.

“இந்த நிலையில் தான், தமிழகத்துக்கான நிலக்கரி வருகை குறைவாக உள்ளது என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார் என்றும், தற்போது கூட முதல்வர் மு.க. ஸ்டாலின், இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார்” என்றும், விளக்கம் அளித்து உள்ளார்.

“இது ஒரு பக்கம் இருக்க, மத்திய தொகுப்பிலிருந்து 714 மெகா வாட் கடந்து 2 நாட்களாக கிடைக்கவில்லை என்றும், இந்த பற்றாக்குறையை சரி செய்ய 550 மெகா வாட் வெளி மாநிலங்கலிலிருந்து பெறப்படுகிறது” என்றும், கூறினார். 

“இதனால், தமிழ்நாட்டில் நாளை முதல் சீரான மின்விநியோகம் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

குறிப்பாக, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மலிவான விளம்பரத்துக்காக, மக்கள் மத்தியில் தவறான கருத்தை எடுத்துக் கூறிவருகிறார்” என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி கவலைத் தெரிவித்தார். 

முக்கியமாக, “போதிய நிலக்கரி இல்லாததால் எந்தெந்த மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும், குஜராத்தில் கூட சுழற்சி முறையில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது”என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் 12 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிக கடுமையான மின்வெட்டு பிரச்னை நிலவி வருகிறது.

அதன்படி, ஆந்திரா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையான மின்வெட்டு காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவது” குறிப்பிடத்தக்கது.