மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.


அதன் பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில், “என்னுடைய அக்கா புரட்சித்தலைவியின் 73-வது பிறந்த நாள் அன்று வந்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்தித்து தேர்தலை சந்திக்க வேண்டும். திமுக தான் நமக்கு எதிரி அவர்களை வீழ்த்த சபதம் எடுத்துக்கொள்வோம்.


தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி தொடர வேண்டும் என்று புரட்சித்தலைவி கூறிச் சென்றுள்ளார். அதனால் அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நானும் உங்கள் அனைவருக்கும் துணை இருப்பேன். விரைவில் தொண்டர்களை பொதுமக்களையும் சந்திக்க வருவேன்” என்று தெரிவித்தார்.


மேலும் இன்று சசிகலாவை நேரில் சந்திக்க பாரதிராஜா சென்றிருந்தார். சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “சசிகலா என்னும் சாதனை தமிழச்சியை பார்க்க வந்தேன். தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப சசிகலா வந்திருக்கிறார்” என்றார்.

பாரதிராஜாவின் இந்த கருத்தும் மற்றும் சரத்குமார், ராதிகா, இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்தது அரசியல் தளத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.