தமிழக தேர்தலையொட்டி திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘’ திமுக பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்குக் குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைத்தது.

அதாவது பாஜக கூட்டணி அமைக்க திமுக மூன்று நிபந்தனைகளை விதித்து பாஜகவின் ஜீவாதாரமான கொள்கைகளைக் கட்டுப்படுத்தியது.


அதில் முதலாவது பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருக்கும் வரை, பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டக் கூடாது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தான 370- ஐ எடுக்கக் கூடாது. பொது சிவில் சட்டம் கொண்டுவரக் கூடாது. இந்த மூன்றுதான் பாஜகவின் ஜீவாதாரக் கொள்கைகள். இது மூன்றை கட்டுப்படுத்தியது திமுக.


திமுக பாஜகவுடன் கூட்டணியிலிருந்தபோது பாஜகவின் தத்துவம் மற்றும் அதன் லட்சியம் நிறைவேறாமல், நாட்டில் மதவாதம் வளராமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். அதை அவர்கள் மீறாமல் பார்த்துக் கொண்டோம். ஆனால் பாஜகவுடன்  அதிமுக கூட்டணி அமைந்தவுடன் நிலைமை மாறிவிட்டது.


”நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 100 நாளில் மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைப்பேன் என்று சொன்ன தலைவர் இந்தியாவிலேயே மு.க.ஸ்டாலின் ஒருவர்தான். தமிழ்நாட்டு அரசியலில் இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல்.நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இதிலிருந்து ஒரு ஆளைக்கூட பாஜகவால் கலைக்க முடியாது” என்று கூறினார்.