உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், முன்னதாக விழுப்புரத்தில் தான் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி, தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பை ஒன்றை வெளியிட்ட நிலையில், இதனை கையில் எடுத்துக்கொண்ட தமிழகத்தின் முக்கிய எதிர் கட்சியான அதிமுக, இந்த விவாகாரத்தை கையில் எடுத்து போராட்டத்தை நடத்தியது. 

இது குறித்து, நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், மனம் உவந்து செய்யவில்லை என்றும், சொத்துவரி உயர்வை யாரும் அரசியலாக்க வேண்டாம்” என்றும், எதிர் கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். 

எனினும், திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது நேற்றைய தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, “5 அல்லது அதற்கு மேலாக நபர்கள் கூடும் விதமாக சட்ட விரோதமாக கூடுதல், அதை கலைக்க கட்டளையிட்ட பிறகு கூடுவது அல்லது தொடர்வது அரசு ஊழியர் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, பொதுப் பாதையில் கூடுவதற்கு தடை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு” செய்யப்பட்டது.

அந்த வகையில், “எடப்பாடி பழனிசாமி, வெல்லமண்டி நடராஜன், பரஞ்ஜோதி, சிவபதி, வளர்மதி, நல்லுசாமி உள்ளிட்ட 25 பேர் மீது திருச்சி கண்டோன் மெண்ட் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு” செய்து உள்ளனர். ஜனநாயக முறைப்படி சொத்து வரி உயர்வுக்கு போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததற்கு அதிமுகவினர்  கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது நேற்றைய தினம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் மகளிருக்கான திட்டங்களை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், இன்றைய தினம் விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதுவும், “கடந்த அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம், மகளிருக்கான ஊக்கத் தொகை, மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவற்றை திமுக அரசு ரத்து செய்ததாக கூறி” இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிலையில், “அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை போலீசார், முன்னதாக அதிரடியாக கைது” செய்து உள்ளனர். 

மேலும், இந்த போராட்டத்தின் போது, சி.வி. சண்முகத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்வம், அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.